மரண தண்டனை மானுடத்திற்கே இழுக்கு!1830ல் ஆளும் வெள்ளை பிரித்தானிய அரசால் இந்தியர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட வேலூர் மத்திய சிறை இந்திய சிறைகளில் மிகவும் பழமையான ஒன்று. அந்தமான் சிறைக்கு கடத்தப்பட முடியாத உடல் பலவீனமான கைதிகளை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வெள்ளை அரசாங்கம் இங்கு அடைத்து வைத்திருந்தது.
வேலூர் மத்திய சிறையில் இதற்கு முன்பு சிறைப்படுத்தப்பட்டிருந்த ராஜாஜி, VV கிரி, CN அண்ணாதுரை, காமராஜர், வினோபா பாவே, ஜெயேந்திர சரஸ்வதி ஆகிய பிரபலங்களுத்தைத் தொடர்ந்து சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் இங்கு அடைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரே வித்தியாசம் இவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இம்மூன்று தமிழர்களின் கருணை மனுக்களை நிராகரித்ததன் விளைவாக 9 செப்டம்பர் 2011 அன்று தூக்கில் தொங்கவிடப்படவிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எழுந்த தன்னெழுச்சியான போராட்டங்கள் தற்காலிகமாகக் காப்பாற்றியிருக்கின்றன.
ஆனால் இந்த மரண தண்டனை அறிவிப்பு, அதில் காட்டப்படும் மத்திய அரசின் துரிதம், அதை எதிர்த்து நிகழ்ந்த பல்வேறு போராட்டங்கள் தமிழர் மனதிலும் மனித உரிமையாளர் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
பாகம் -1
மரண தண்டனை
நீதியின் பெயரால் செய்யப்படும் கொலை
மனிதர்களே மனிதர்களை நீதியின் பெயரால், சட்டத்தில் பெயரால் பொது நன்மை கருதி செய்யும் கொலைகளே மரண தண்டனை.
மன்னிப்பு, மனம் திருந்துதல், மறுவாழ்வு போன்றவற்றில் நம்பிக்கையில்லாது பழிக்குப்பழி வாங்குவதே மரண தண்டனையின் பின்னால் மறைந்திருக்கும் மனநிலை.
மரண தண்டனை மனித வரலாற்றில் பல காரணங்களுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
ஏதன்ஸ் நகரத்தின் இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச்சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு சாக்ரடீஸ் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.
யேசு நாதர் யூத மன்னனுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.
அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் ஐரோப்பியர்களுக்கு தங்களது நிலத்தைத் தாரை வார்க்க மறுத்த குற்றத்திற்காக லட்சக்கணக்கில் விதம் விதமாகக் கொலை செய்யப்பட்டனர்.
கறுப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலத்தில் வெள்ளைக் கார முதலாளிகளுக்கு எதிராக செய்யப்படும் எச்செயலும் மரண தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறது.
ஐரோப்பாவில் சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு லட்சக்கணக்கில் பெண்கள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர்.
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் பிரிட்டானிய ஆட்சியருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக தூக்கிலடப்பட்டனர்.
கோவலன் பாண்டிய மன்னனின் மனைவியின் கால் சலங்கையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டான்.
இந்தியாவில் சமணர்கள் ஆயிரக்கணக்கில் கழுவேற்றப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாறும் உண்டு.
கி.மு.16ம் நூற்றாண்டில் எகிப்து நாட்டில் மந்திரம் தந்திரம் புரிந்ததற்காக ஒருவரின் கழுத்தை கோடாரியால் வெட்டி மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவே வரலாற்றில் பதிவான முதல் மரண தண்டனை என்று கருதப்படுகிறது.
கொலை, திருட்டு, கொள்ளை, ராஜ துரோகம், கடத்தல், போர் குற்றங்கள், காதல், பலாத்காரம், பேச்சு, எழுத்து, மாற்றுக்கருத்து என்ற பல காரணங்களுக்காக குற்றம் புரிந்ததாகக் கருதப்படுவர்களும், நிரபராதிகளும், ஆண்களும் பெண்களுமாய் இதுவரை கோடிக்கணக்கானோர் இப்பூமியில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருப்பர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலகாலகட்டங்களில் பலவிதமாக பலகருவிகளைக் கொண்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அக்கொலை முறைகளை நாங்கள் இந்த ஆவணப்படத்திற்காக ஆய்வு செய்கையில் அவை கொடுமையானதாக, அருவருப்பு அளிப்பதாக, மனித மாண்பை அழிப்பதாக இருந்தன. அவற்றில் சிலவற்றை நாங்கள் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
தீயில் இட்டு எரித்துக் கொலை செய்தல்
மாற்றுக் கருத்து, தேச துரோகம், சூனியம் வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் தியீல் இட்டு எரித்துக் கொலை செய்யப்படுகிறார். இத்தண்டனை முறை உலகெங்கும் பண்டைய காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை முறைகளில் வழமையான ஒன்றாகும். கொதிக்கும் ஈயத்தைக் காய்த்து குற்றம் சாட்டப்பட்டவரின் தொண்டையில் ஊற்றியும் பைபிள் காலத்தில் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் குவிக்கப்பட்ட கட்டைகளின் நடுவே நிறுத்தப்பட்டு கட்டிவைக்கப்பட்டு எரிக்கப்படுகிறார்.
மூட்டப்படும் நெருப்பு பலமாக இருக்குமெனில் புகையில் உருவாகும் கார்பன் மோனாக்சைட்டினால் மூச்சு முட்டி குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து போவார். நெருப்பு சிறிதாக இருக்குமெனில் குற்றம் சாட்டப்பட்டவர் படிப்படியாக எரிந்து அதிர்ச்சி, நெஞ்சு வலி, ரத்த இழப்பு மற்றும் முக்கிய பாகங்கள் சிதைந்து போவதாலும் இறந்து போவார்.
நெருப்பு மூட்டி கொலை செய்யும் தண்டனை சிரத்தையுடன் நிறைவேற்றப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் படிப்படியாக எரியும். முதலில் கால், தொடை, இடுப்பு ஆகியவை எரிந்து பின்பு கைகள், நெஞ்சு, முலைகள், கழுத்து, முகம் ஆகியன எரியும். தலை எரிந்து வெடித்துச் சிதறும் போது தான் மரணம் நிகழும். ஒருவர் நெருப்பில் எரிந்து சாவதற்கு சராசரியாக 2 மணி நேரம் பிடிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
18ம் நூற்றாண்டின் இறுதியில் நெருப்பில் இட்டு எரித்து தண்டனை கொடுக்கும் முறை படிப்படியாக உலகெங்கும் குறைந்துவிட்டது. அது மிகக்கொடூரமான தண்டனை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
சிலுவையில் அறைதல்:
சிலுவையில் அறைதல் என்பது ஒரு பழமையான, வலி மிகுந்த தண்டனை. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சிலுவையில் கட்டப்பட்டோ, ஆணி அறையப்பட்டோ சாகும் வரை தொடங்கவிடப்படுவார். கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் மத்தியில் இந்த தண்டனை முறை பயன்படுத்தப்பட்டது. ஜப்பானிலும் சிறு குற்றம் செய்தவரையும் கிறிஸ்தவர்களையும் சிலுவையில் அறைந்து மரண தண்டனை கொடுத்திருக்கின்றனர்.
வலி நிறைந்த, மெதுவான, கொடூரமான, அவமானப்படுத்தக்கூடிய, பொது இடத்தில் கொடுக்கப்படும் இத்தண்டனை பார்வையாளர்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கவும் நிறைவேற்றப்பட்டது. சில இடங்களில் மரத்தில் தொங்கவிடப்பட்டும், சில இடங்களில் ஒற்றைக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டும் சில இடங்களில் சிலுவை வடிவக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டும் தண்டனை கொடுக்கப்பட்டது.
சில வழக்குகளில் 135 கிலோ எடையுள்ள சிலுவையையும் குற்றம் சாட்டப்பட்டவர் சுமந்து செல்லவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது அறையப்படும் ஆணிகளும் விசத்தன்மை கொண்டதாகவிருக்கும். ஆணிகள் 13முதல் 17 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும்.
மேலும் சிலுவையில் அறையப்படுவோர் உடைகள் களையப்பட்டு நிர்வாணமாகத்தான் தொங்கவிடப்படுவர். இத்தாலியின் ப்ளாரன்ஸ் நகரத்து சாண்டோ ஸ்பிரிடோ ஆலயத்தில் இருக்கும் மைக்கலேஞ்சலோவின் க்ரூசிபிக்ஸ் என்ற சிலையில் நிர்வாணமாக பிறப்புறுப்புகள் வெளித்தெரிய சிலுவையில் தொங்கவிடும் காட்சி இருக்கிறது. எல்லோர் முன்பும் தான் சிலுவையில் தொங்குபவர் சிறுநீரோ அல்லது மலமோ கழிக்கமுடியும். சிலுவையில் தொங்கவிடப்படுவர்களில் கால்கள் இரும்புக் கம்பிகளால் அடித்து உடைக்கபடும். இதனால் வேதனை அதிகரிக்கும். மரணம் சீக்கிரம் நிகழும்.
சிலுவையில் தொங்கவிடப்பட்டவர் இறப்பதற்கு சில மணி நேரங்களோ சில நாட்களோ ஆகலாம். ரத்தம் வெளியேறுவதாலோ, மாரடைப்பாலோ, காயங்களில் ஆறாமல் சீழ் வடிவதாலோ, ஆணி அறைவதாலோ, பலமாகத் தாக்கப்படுவதாலோ சிலுவையில் தொங்கவிடப்படுபவருக்கு மரணம் நிகழும். சிலுவையில் தொங்கவிடப்பட்டவரின் உடல் அங்கேயே அழுகி, எலும்புக்கூடாகும் வரை அகற்றப்படமாட்டாது. கழுகுகளுக்குத் தான் அந்த உடல் உணவாகும். அந்த உடலுக்கு நல்லடக்கம் கிடைக்காது.
சிலுவையில் தொங்கவிடப்பட்டவரின் மரணத்தைத் துரிதப்படுத்துவதற்காக அவர் தொடர்ந்து காவலர்களால் கடுமையாகத் தாக்கப்படுவார். நெஞ்சு எலும்புகளை உடைப்பதும், இதயத்தினுள் கத்தியைப் பாய்ச்சுவதும், காலுக்குக் கீழே தீமுட்டுவதுமாய் வன்முறையில் ஈடுபடும் காவலர்கள் தொங்கவிடப்படுபவர் இறந்த பின் தான் அங்கிருந்து நகர்வர்.
ரோமானியர்களும் பாரசீகர்களும் மெசடோனியர்களும் சிலுவையில் அறைந்து தொங்கவிடும் தண்டனை முறையை நிறைவேற்றினர். அடிமைகளும் கொள்ளைக்காரர்களும், நாட்டின் எதிரிகளுமே சிலுவையில் தொங்கவிடப்படுவர். அதுவொரு ஆக அவமானம் நிறைந்த, இழிவான தண்டனையென கருதப்பட்டது. ரோம நாட்டின் குடிமக்கள் யாரும் சிலுவையில் தொங்கவிடப்பட மாட்டார்கள். அடிமைகள் கிளர்ச்சி செய்யாதிருக்க ஸ்பார்டகஸின் தோழர்கள் 6000 பேருக்கு சிலுவையில் தொங்கவிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ரோமானிய மன்னன் கான்டன்டைன், கி.பி.337ல் யேசு நாதரின் மீதிருந்த பற்று காரணமாக சிலுவையில் அறையும் தண்டனையை தடை செய்தார்.
ஜப்பானில் கிபி15ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தின் வருகைக்குப் பிறகு சிலுவையில் அறையும் தண்டனை 200 ஆண்டுகளுக்கு அதிகமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் நிறைவேற்றப்பட்டது. முதலாம் உலகப்போரிலும் இரண்டாம் உலகப்போரிலும் ஜெர்மானியர்களுக்கு எதிராகவும் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கல்லால் எறிந்து கொல்லுதல்
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பலர் சேர்ந்து சாகும் வரை கல்லால் எறியும் முறையான இத்தண்டனையில் யார் அந்த மரணத்தை விளைவித்தார் என்று சொல்ல முடியாது. ஒரு கூட்டமே சேர்ந்து கொடுக்கும் தண்டனை அது. மிகவும் வலி தரக்கூடிய மெதுவான தண்டனையை சித்தரவதை என்றும் அழைக்கலாம்.
இது ஒரு மிகப் பழைய தண்டனை முறை. கிரேக்கர்கள் காலத்தில் கிரேக்க மரபு சார்ந்த கதைகளில் கல்லால் எறிந்து கொலை செய்யும் தண்டனை முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஈடிபஸ் தனது தந்தையைத் தான் கொன்றுவிட்டதை அறிந்ததும் தன்னை கல்லால் எறிந்து கொலை செய்யுமாறு கேட்கிறான்.
லூசியஸ் சாடர்நினஸ் என்ற ரோமானிய சிந்தனையாளர் கொலை குற்றம் சாட்டப்பட்டு கிமு100ம் ஆண்டு கல்லால் எறிந்து கொலை செய்யப்படும் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.
விபச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை கல்லால் எறிந்து கொலை செய்ய முயலும் தனது சீடர்கள் அடங்கிய கூட்டத்தை யேசு நாதர் தடுத்து நிறுத்தியிருக்கிறார். “Let him who is without sin among you ibe the first to throw a stone at her.” பாவமே செய்யாதவன் உங்களில் யாரோ அவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும் என்று சொன்னதும் எல்லோரும் விலகிப்போன சம்பவம் பைபிளில் உண்டு.
விலங்குகளோடு உறவு வைத்துக்கொள்ளுதல், திருமணம் நிச்சயிக்கப்பட்ட கன்னிப்பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ளுதல், தாயோடு, சித்தியோடு, மருமகளோடு உறவு வைத்துக்கொள்ளுதல், பெற்றோரைத் தூற்றுதல், பில்லி சூனியம், உருவ வழிபாடு, மதத்தை அவமரியாதை செய்தல், குழந்தைகளை நரபலி கொடுத்தல், குறி சொல்லுதல், கணவன் அல்லாதவருடன் ஒரு பெண் உறவு வைத்துக்கொள்ளுதல், பெண்கள் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளுதல், தந்தைக்கு எதிராக எதிராக செயல்படும் பெண்கள் ஆகியோருக்கு கிறிஸ்தவத்திற்கு முந்தைய யூதர்களின் காலத்தில் கல்லால் அடித்துக்கொலை செய்யும் தண்டனை முறை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய சரியத் சட்டப்படி திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு தற்போதும் ஆப்கானிஸ்தான், இந்தோனிசியா, ஈரான், ஈராக், செளதி அரேபியா, நைஜீரியா, சூடான், சொமாலியா ஆகிய நாடுகளில் இத்தண்டனை வழங்கப்படுகிறது.
விலங்குகளுக்கு இரையாக்குவது
கூண்டில் அடைக்கப்பட்ட வனவிலங்குகளுக்கு குறிப்பாக சிங்கத்திற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களை இரையாக்குவதும் ஒரு பழங்கால மரண தண்டனை முறையாகும். கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து ரோமானியர்களால் நிறைவேற்றப்படுகிற இம்முறை, விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் நடத்தப்பட்டது. மிகவும் கொடூரமாகக் குற்றம் செய்தவர்களையும் கிறிஸ்தவர்களையும் ரோமானியர்கள் சிங்கத்திடம் தூக்கியெறிந்திருக்கின்றனர்.
சிங்கத்தைத் தவிர கரடி, சிறுத்தை, கறுஞ்சிறுத்தை, யானை மற்றும் காளைகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் மரண தண்டனை கொடுத்துக் கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
எகிப்து மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் சிங்கத்திற்கும், முதலைக்கும் உயிருடன் மனிதர்களை நரபலி கொடுக்கும் வழக்கம் கி.மு.4ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது. மேலும் மன்னனை கைவிடும் படைத்தளபதிகளுக்கும் மன்னனுக்கு துரோகமிழைக்கும் வீரர்களுக்கும் ஆயுதமற்று சிங்கத்தின் முன்பு தூக்கியெறியப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
அலெக்ஸாண்டரின் போர்முறையில் மன்னனை விமர்சித்த காரணத்திற்காக லைசிமாகஸ் என்றொருவன் சிங்கத்தின் முன் தூக்கியெறியப் பட்டிருக்கிறான். ஆனால் வெறும் கையுடன் சிங்கத்தை வென்றதால் அவன் அலெக்ஸாண்டரின் முக்கிய படைத்தளபதியானதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது.
கி.மு.6ம் நூற்றாண்டில் டானியல் என்ற தீர்க்கதரிசி சிங்கத்தின் முன் தூக்கியெறியப்பட்டதாக பைபிள் கதைகளில் குறிப்பு இருக்கிறது.
ரோமானியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைகளைக் கட்டியும் நிர்கதியாக சிங்கத்தின் முன்பு கூண்டினுள் நிறுத்தி மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கின்றனர். அழகற்றவனாக இருந்த காரணத்தனால் ஒருவனை சிங்கத்திற்கு படையலாக்கியிருக்கின்றனர். இறைச்சியின் விலை அதிகமான போது சாதாரண குற்றம் புரிந்தவர்களையும் சிங்கங்களுக்கு இரையாக்கியிருக்கின்றனர்.
ரோம் நகருக்கு சிங்கம் ஆப்ரிக்காவிலிருந்தும், கரடிகள் ஜெர்மனியிலிருந்தும் இறக்குமதி செய்திருக்கின்றனர்.
கொலை, கொள்ளை, திருட்டு, பலாத்காரம், துரோகம், சூழ்ச்சி, மன்னனை எதிர்த்தல் ஆகிய குற்றங்களுக்கு இணையாக கிறிஸ்தவர்களுக்கும் ரோமானியர்கள் விலங்குகளுக்கு இரையாக்கும் தண்டனையைக் கொடுத்திருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் இரவில் ரகசியமாகக் கூடி ஜெபம் செய்வது, பாடல் பாடுவது கலவரம் செய்வதற்கு நிகராகக் கருதப்பட்டது. அவர்கள் ரோமானியர்களின் கடவுளை வணங்காது, மந்திர தந்திரங்கள் புரிந்து கொண்டும், மன்னனின் சின்னங்களுக்கு மதிப்பு அளிக்காது சட்டத்திற்குப் புறம்பான மதம் ஒன்றைப் பின்பற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டனர். பூகம்பம், பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளுக்கும் அவர்களின் மத நடவடிக்கையே காரணமென்று சிங்கங்களுக்கு முன்பு தூக்கி எறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சில சமயங்களில் உடல் துண்டாக்கப்பட்டோ, கழுத்து முறிக்கப்பட்டோ, சிலுவையில் அறைந்து தொங்கவிடப்பட்டோ கொலை செய்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை ரோமானியர்கள் வன விலங்குகளுக்கு இரையாக்கியிருக்கின்றனர்.
கி.பி. 681ல் இந்த தண்டனை முறை ரோமானியர்களால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
லிங்க் சீ
லிங்க் சீ என்றால் சீன மொழியில் மெதுவாக வெட்டுதல் என்று பொருள். சீனாவில் நிறைவேற்றப்படும் இந்த மரண தண்டனை முறைப்படி குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் ஒரு கத்தியால் ஆயிரம் முறை வெட்டப்பட்டு ஒவ்வொரு பாகமாக வெட்டி எடுக்கப்படும். சில நாட்கள் வரை நடைபெறும் இந்தத் தண்டனை நிறைவேற்றல் கி.பி 900 தொடங்கி 1905 வரை முறை சீனாவில் வழக்கத்தில் இருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் பொது இடத்தில் ஒரு கட்டையில் இறுக்கக் கட்டப்பட்டு அவரது உடல் கீற்று கீற்றாக வெட்டப்படும். இந்த தண்டனையின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் பொது இடத்தில் அவமானப் படுத்தப்படுகிறார். அவர் மிகவும் மெதுவாக, படிப்படியாக வதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவர் இறந்த பிறகும் அவரது உடல் தொடர்ந்து வெட்டப்படும்.
ராஜ துரோகம், ஒரு கூட்டத்தைக் கொலை செய்தல், பெற்றோர்களைக் கொலை செய்தல், முதலாளியைக் கொலை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. சில சீனப் பேரரசர்கள் மக்களைப் பயமுறுத்துவதற்காக சிறிய குற்றம் புரிந்தவர்களையும், குற்றம் புரியாதவர்களையும் பொய்சாட்சிகளின் உதவிகொண்டு லிங்க் சீ முறையில் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். போர் கைதிகளுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தார் செல்வாக்கு உடையவர்களாக இருந்தால் அவருக்கு ஓபியம் எனும் போதை மருந்து கொடுப்பதற்கு ஆவண செய்யப்படும்.அதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மறந்து வலியை உணராமல் இருக்கமுடியும். அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் இதயத்தில் கத்தியைப் பாய்ச்சப்பட்டு அவர் தொடக்கத்திலேயே கொலை செய்யப்படுவார்.
இந்த முறைப்படி முதலில் மிகவும் கூர்மையான கத்தியைக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரின் கண்கள் நோண்டி எடுக்கப்படுகின்றன. அதன் மூலம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் குற்றம் சாட்டப்பட்டவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்.
அதற்குப்பிறகு சிறிய சிறிய வெட்டுக்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் காதுகள், மூக்கு, நாக்கு, கை விரல்கள், கால் விரல்கள், முலைகள், பிறப்பு உறுப்புகள் படிப்படியாக வெட்டி எடுக்கப்படுகின்றன. அதன் பிறகு கைகள், தொடை, புட்டம் ஆகிய பகுதிகள் வெட்டப்படுகின்றன. மூன்று நாட்கள் நடக்கும் இந்த தண்டனை நிறைவேற்றல் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் 3600 முறை கத்தியால் வெட்டப்படுகிறது. இறுதியாக துருவி எடுக்கப்பட்ட உடல் பொது இடத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. சில சமயம் அந்த உடலின் பாகங்கள் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இவற்றைத் தவிர பல மரண தண்டனை முறைகள் உலகம் முழுக்கப் பயன்பாட்டில் இருந்தன என்பதும் மரண தண்டனையை எல்லா அரசுகளும் மக்களை நெருக்கடியில் வைத்திருக்கவே அவை நிறைவேற்றின என்பதும்
நாம் யாவரும் அறிந்ததே.
தற்போது பயன்பாட்டில் இருக்கிற தண்டனை முறைகள் சில பழைய முறைகளைப் போல கொடூரமானதாக இல்லாவிட்டாலும் அவை மிகவும் நுட்பமானதாக, துல்லியமானதாக, வலி குறைந்ததாக இருப்பதாகக் கருதப்படுபவை. ஆனாலும் மரணம் நிச்சயம்.
தலையைத் துண்டாக்குதல்:
கத்தி, கோடாறி, கம்பி, அரிவாள், வாள், கில்லட்டின் இவற்றில் ஏதாவது ஒன்று பயன்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரின் தலையைத் துண்டாக்குவதும் மிகப் பழைய மரண தண்டனை முறைகளில் ஒன்றாகும். துண்டாக்கப்பட்ட தலையை எல்லோர் பார்வைக்கு வைப்பதும் அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கவோ, தண்டனையை நிறைவேற்றியவர்கள் தங்களது பெருமையை பறை சாற்றவோ செய்வதும் உலகம் முழுக்க காணக்கிடைக்கிற வழக்கமாகும்.
தலை துண்டானதும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்தம் மூளைக்கு வருவது நின்று போகும். அதனால் தலை துண்டான சில நிமிடங்களில் மூளையின் மரணம் நிகழ்ந்துவிடும். துண்டாக்கப்பட்ட தலையைத் திரும்ப உடலுடன் இணைத்து உயிரூட்டும் சாத்தியம் விலங்குகளுக்குப் பரிசோதனை முறையில் நடந்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தலையைத் துண்டாக்கும் தண்டனை முறை வழக்கத்தில் இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் வாளால் தலை துண்டாக்கப்பட்டு இறப்பது என்பது வீர மரணமாகவும் கருதப்பட்டது. மேட்டுக்குடி மக்களுக்கே இத்தண்டனை வழங்கப்பட்டது.
தலையைத் துண்டாக்கும் வாளோ, கோடாறியோ மிகக்கூர்மையாக இருந்தால், தலை மிகத்துல்லியமாக வெட்டப்பட்டால் தலை மிகத்துரிதமாக துண்டாகும் என்பதோடு ஒப்பீட்டளவில் வலியே இல்லாத மரண தண்டனை இது என்றும் கருதப்படுகிறது. துல்லியமாக வெட்டச்சொல்லி தலையை வெட்டுபவருக்கு குற்றம் சாட்டப்பட்டவர் லஞ்சமாக தங்க நாணயம் கொடுத்த சம்பவங்களும் ஐரோப்பாவில் நடந்திருக்கின்றன. சரியான வெட்டும் நபர் இல்லாமல் போனாலோ அல்லது வெட்டுபவருக்கு போதுமான உற்சாகம் இல்லாமல் போனாலோ அல்லது கருவி கூர்மையாக இல்லாது போனாலோ பலருக்கு பல வெட்டுகள் நிகழ்ந்தும் தலை துண்டாகாமல் துடித்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
ஒரே வெட்டில் தலை துண்டாகவேண்டும் என்பதற்காக எடை அதிகமான இரண்டு கைகளால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாள் அல்லது கோடாறி தான் இத்தண்டனை முறையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, கொரியா, ஸ்பெயின், மெக்ஸிகொ, செளதி அரேபியா போன்ற நாடுகளிலும் மரண தண்டனை தலையைத் துண்டாக்கும் முறையைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டது.
அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்தவர்க்கும் ஒரே மாதிரியான வலி இல்லாத, மாண்புமிக்க, சுருக்கமான மரண தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று பிரெஞ்சு புரட்சிக்கு சற்று முன்பு பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி கில்லட்டின் என்ற தானியங்கி தலைவெட்டும் கருவியை பிரான்ஸில் அறிமுகப் படுத்தினார். புரட்சிக்குப் பின்பு அவரையும் அவரது மனைவி மேரி அன்டோனியட்டையும் சேர்த்து கில்லட்டின் தான் வெட்டியது. 1981ம் ஆண்டு மரண தண்டனை பிரான்ஸில் முற்றிலும் ஒழிக்கப்படும்வரை கில்லட்டின் தான் பெரும்பாலான மரண தண்டனைகளை நிறைவேற்றப் பயன்படுத்தப்பட்டது.
பிரான்ஸில் பிரெஞ்சுப்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் 40,000 பேர் கில்லட்டினைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்கள். அது ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாக, முன்னறிவுப்பு செய்து, குழந்தைகளுடன் பெற்றோர்கள் தலை துண்டாக்கபடுவதை கூட்டம் கூட்டமாகப் பார்க்க வந்திருக்கின்றனர். ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் இரண்டாம் உலகப்போரின் போது 16,000ம் பேருக்கு நாஜி படையினரால் கில்லட்டினைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மின்சார நாற்காலி
அமெரிக்காவில் மட்டுமே நிறைவேற்றப்படும் இத்தண்டனை முறையின் படி குற்றம் சாட்டப்பட்டவரை இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு மர நாற்காலியில் உட்கார வைத்து அவரது உடல் மீது மின்கம்பிகளைப் பொருத்துகின்றனர். பல கட்டங்களில் 2000 வோல்ட்டுக்கும் அதிகமான மின்சாரம் அவர் மீது செலுத்தப்படுகிறது. முதலில் கொடுக்கப்படும் மின் தாக்குதலில் அவர் தனது சுயநினைவை இழந்து அவருக்கு மூளையின் மரணம் நிகழ்கிறது. இரண்டாவது மின் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவரின் முக்கிய உறுப்புகள் சேதமடைகின்றன. அதிக மின்சாரம் பாய்வதினால் அவரது இதயம் அளவுக்கு அதிகமாகத் துடிக்க ஆரம்பித்து மரணம் நிகழ்கிறது.
1887ல் அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் தூக்கு தண்டனைக்கு மாற்றாக புதிய, மனிதத் தன்மையுள்ள ஒரு மரண தண்டனை முறை வேண்டும் என்கிற நோக்கில் மின்சார நாற்காலி முறை அறிமுகப் படுத்தப்பட்டது. 1890ம் ஆண்டு வில்லியம் கெம்லர் என்பவருக்கு முதன் முறையாக மின்சார நாற்காலியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏறக்குறைய 8 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட இத்தண்டனையின் போது கெம்லரின் ரத்த நாளங்கள் வெடித்து மின்கம்பி கட்டப்பட்ட இடங்களில் ரத்தம் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
1903ம் ஆண்டு வார்மர் என்பவருக்கு மின்சாரத்தைப் பாய்ச்சி மரண தண்டனை கொடுக்கப்பட்டும் அவர் இறக்கவில்லை. பிணவறைக்கு கொண்டு சென்ற பின்பும் அவர் மூச்சு விட்டார். மறுபடியும் மின்சாரம் பாய்ச்சு இரண்டாவது முறையாகத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1928ம் ஆண்டு கென்டகி சிறையொன்றில் ஒரே நாளில் 7 நபர்களுக்கு மின்சார நாற்காலி முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மின்சாரம் பாய்ச்சப்படுவதால் பல முறை குற்றம் சாட்டப்பட்டவரின் தலை தீ பிடித்து எரிந்திருக்கிறது. பலருக்கு மீண்டும் மீண்டும் மின்சாரம் பாய்ச்சவேண்டியிருக்கிறது. தூக்கு தண்டனையை விட கொடூரமானதாக இருப்பதாகக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. இத்தகைய குளறுபடிகளால் மின்சாரம் பாய்ச்சி தண்டனை கொடுக்கும் முறைக்கு எதிர்ப்புகள் கிளம்பி இப்பொது அமெரிக்காவில் 6 மாநிலங்களைத் தவிர உலகில் வேறெங்கும் இத்தண்டனை முறை பழக்கத்தில் இல்லை.
விச ஊசி முறை
குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு உயிரைக்கொல்லக்கூடிய விச மருந்தை ஊசி மூலமாக செலுத்துவதன் மூலம் மரண தண்டனை மிகக் குறைவான நேரத்தில் நிறைவேற்றப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பிற மரண தண்டனை முறைகளான தூக்கு தண்டனை, துப்பாக்கியால் சுடுதல், தலையை வெட்டுதல், மின்சாரத்தப் பாய்ச்சுதல் போன்ற வலி நிறைந்த தண்டனைகளுக்குப் பதிலாக விச ஊசி போட்டு ஒருவரைக் கொல்லும் முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. 1982ல் முதன்முதலாக டெக்சாஸ் மாநிலத்தில் சார்லஸ் ப்ரூக்ஸ் என்பவருக்கு விச ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனா, கொதமாலா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இம்முறைப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜெர்மனியில் வாழத்தகுதியற்றவர்கள் என்று குற்றம் செய்யதவர்களையும் ஹிட்லரின் அரசாங்கம் ஆயிரக்கணக்கில் விச ஊசி போட்டு கொன்றது.
இம்முறைப்படி மூன்று கட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு பார்பிடூரேட் என்கிற மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக பான்குரோனியம் புரொமைட் கொடுக்கப்பட்டு உடலிலுள்ள அனைத்து தசைகளையும் செயலற்றுப் போகச்செய்கிறது. அதுவே ரத்தவோட்டத்தை நிறுத்தி மரணத்தை விளைவிக்கிறது. மூன்றாவதாக பொட்டசியம் குளோரைட் செலுத்தப்பட்டு இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படுகிறது.
ரத்த நாளங்கள் மூலமாக, படிப்படியாகக் விசம் ஏற்றப்பட்டு மரணம் மிகச் சில நிமிடங்களில் நிகழ்கிறது. மயக்கமருந்து கொடுக்கப்படுவதற்கான காரணம் ஏற்றப்படும் விசம் கடும் வலியையும் வேதனையும் கொடுக்கும் என்பதாலும், மயக்க நிலையில் தண்டனை பெறுபவர் அதை உணரமாட்டார் என்றும் கூறப்படுகிறது. விச ஊசி போட்டு மரண தண்டனை கொடுக்கும் முறையை எதிர்ப்பவர்கள் செலுத்தப்படும் விசம் மயக்கமருந்தை செயலிழக்கச் செய்துவிடும் என்றும் வலியை தண்டனை பெறுபவர் உணர்ந்தாலும் தசைகள் செயலிழப்பதால் அதை அவரால் வெளிப்படுத்தமுடியாது என்றும் கூறுகின்றனர்.
இத்தண்டனையை நிறைவேற்றுவதில் அமெரிக்காவில் மருத்துவர்கள் யாரும் பங்கு கொள்வதில்லை. அதனால் சரியாக மயக்க மருந்து செலுத்தப்படுவதில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. அது தண்டனை பெறுவோரின் வேதனையைக் குறைக்காது என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். விச ஊசி போட்டு நிறைவேற்றப்படும் தண்டனை முறை வலி குறைந்ததாகத் தோற்றமளிக்கிறதே தவிர உண்மையில் எந்த ஒரு கொலையும் வேதனை தரக்கூடியது தான்.
விசவாயுக்கூடம்
மூடப்பட்ட ஒரு அறையில் குற்றம் சாட்டப்பட்டவர் அடைக்கப்பட்டு ஹைட்ரஜன் சயனைட் அல்லது கார்பன் டை ஆக்சைட் மற்றும் கார்பன் மோனாக்சைட் போன்ற விசத்தன்மை கொண்ட வாயுக்கள் அந்த அறைக்குள் திறந்துவிடப்படுகின்றன. அதன் மூலம் சில நிமிடங்களில் விசம் ரத்தத்தில் கலந்து அல்லது மூச்சுத் திணறி குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து போகிறார்.
1920களில் அமெரிக்காவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இத்தண்டனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஹிட்லரின் காலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் விசவாயுக்கூடத்தில் தள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
துப்பாக்கியால் சுடுதல்
துப்பாக்கிகள் ஏந்திய ஒரு காவல் படையினர் அல்லது ஒரு காவலர் குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக்க்கொல்லும் தண்டனை முறை உலகில் 70 நாடுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உலகில் அதிக இடங்களில் நிறைவேற்றப்பட்ட தண்டனையும் இது தான். மற்ற தண்டனைகளைக் காட்டிலும் கொளரவமான தண்டனையாகக் குறிப்பாக ராணுவ வீரர்கள் வீரர்கள் மத்தியில் கருதப்படுகிறது.
மிகப் பழைய ஆனால் இப்பொதும் வழக்கில் இருக்கிற தண்டனை முறை. காவலர்கள் அல்லது ராணுவ வீரர்கள் இத்தண்டனை நிறைவேற்றலில் பயன்படுத்தப்படுகின்றனர். பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவரின் கண்கள் கட்டப்பட்டு ஒரே நேரத்தில் 5க்கும் மேற்பட்டவர் கொண்ட குழு துப்பாக்கிகளால் சுட்டு தண்டனையை நிறைவேற்றும். தனி நபர் சுடுவதாய் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவரின் பின் மண்டையில் சுடப்படும்.
ராணுவ வட்டாரத்தில் துரோகம், கோழைத்தனம் மற்றும் கலகம் ஆகிய குற்றங்களுக்காக துப்பாக்கியால் உடன் பணிபுரிந்த படையினரே சுட்டுக்கொல்லும் தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
1914-18ல் நடந்த பின்லாந்து போர் மற்றும் போருக்குப் பிறகு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போதும் பின்லாந்தில் 500க்கும் மேற்பட்டவர்க்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் பாலி குண்டுவெடிப்புக் குற்றத்திற்காக 2008ல் மூவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, மெக்சிகோ, நார்வே, இங்கிலாந்து, ஐக்கிய அரப் எமிரேட் ஆகிய நாடுகளில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை ஆயிரக்கணக்கானோருக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
20ம் நூற்றாண்டில் சோவியத் யூனியனில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றும் முறை பிற நாடுகளைக் காட்டிலும் அதிகம் வழக்கத்தில் இருந்தது. ஒரு காவலர் ஒரு துப்பாக்கியைக் கொண்டு தண்டனை நிறைவேற்றும் முறையும் இங்கு தான் நடைமுறையில் அதிகம் இருந்தது.
அமெரிக்காவில் 1608ல் ஜார்ஜ் கென்டால் என்பவர் ஸ்பெயின் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக துப்பாக்கி ஏந்திய குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ரோனி லி காட்னர் என்பவர் கொலைக் குற்றத்திற்காக 10, ஜூன் 2010ல் துப்பாக்கி ஏந்திய குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இருவருக்கிடையில் நூற்றுக்கணக்கானோருக்கு இத்தண்டனை கொடுக்கப்பட்டது.
சீனாவில் பின்னந்தலையில் சுட்டுக்கொல்லும் முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் மொகலாயர் காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை பீரங்கியில் கட்டி, உடலை தூள் தூளாக்கச் செய்யும் தண்டனை முறை நிறைவேற்றப்பட்டது. வெள்ளைக்காரர்கள் காலத்திலும் குறிப்பாக சிப்பாய் கலகத்தின் போது இத்தண்டனை முறை நிறைவேற்றப்பட்டது.
இந்தோனிசியா, தைவான், மங்கோலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இம்முறை வழக்கத்தில் இருக்கிறது.
தூக்கில் போடுதல்
தூக்கில் போடுதல் மிகப் பழைய தண்டனைகளில் ஒன்றாகும். ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையாகும்.
உயரம் குறைவான தூக்கு, உயரம் அதிகமான தூக்கு என்று பிரதானமாக இரண்டு வகையாகத் தூக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உயரம் அதிகமான தூக்கு முறையில் கழுத்தில் கயிற்றை மாட்டி, தூக்கு மேடையில் குற்றம் சாட்டப்பட்டவர் நிறுத்தப்பட்டதும் காலுக்குக் கீழிருக்கும் பலகை விலக்கப்படுகிறது. கால்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. உடலின் மொத்த எடையும் கயிற்றிலும் கழுத்திலும் அழுத்தப்படுவதால் கழுத்து நெறிக்கப்பட்டு தண்டுவடம் நொறுங்குவதால், ரத்த அழுத்தம் வேகமாக குறைவதால் தூக்கு மாட்டப்பட்டவர் மயக்க நிலை அடைகிறார். கண்கள் பிதுங்கி மண்டை ஓட்டிலிருந்து வெளித்தள்ளப்படுகின்றன. நாக்கும் வாய்க்கு வெளியே தள்ளப்படுகிறது. கழுத்தில் பெரிய வெட்டும் காயமும் பள்ளமும் உருவாகிறது. மலம் அல்லது சிறுநீர் கழிக்கிறார். மூளைக்கு செல்லும் மூச்சுக்காற்று தடைபட்டு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மூளையின் மரணம் நிகழ்கிறது. மற்றும் 8 முதல் 12 நிமிடங்களுக்குள் தூக்கில் தொங்கவிடப்படுபவர் இறந்து போவார்.
உயரம் குறைவான தூக்கு எனும் முறையில் தண்டிக்கப்படுகிறவர் ஒரு முக்காலி மீதோ அல்லது ஒரு நாற்காலி மீது நிறுத்திவைக்கப்பட்டு தூக்கு கழுத்தில் மாட்டப்பட்டதும் முக்காலி தள்ளிவிடப்படுகிறது. இந்த முறையில் தண்டிக்கப்படுகிறவர் அதிக வேதனையை அனுபவிப்பார். மரணம் நிகழ 20 நிமிடங்களாகும். அதனால் இத்தண்டனை முறை பொது இடத்தில் மக்கள் முன்பு நிறைவேற்றப்பட்டது.
2010ம் ஆண்டு 237 பேர்களுக்கு பங்களாதேசம், எகிப்து, ஈரான், ஈராக், சூடான், ஜப்பான் ஆகிய நாடுகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் 5 பெண்கள்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது ஈரான் நாடு இருக்கிற பாரசீகத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சிறப்பான கருவிகளோ, கொலை செய்ய வல்லுநனரோ தேவைப்படாத மிகவும் சுலபமாக, எல்லோரும் பார்க்கக்கூடிய அளவில் உயரமான மேடையில் நடத்தப்பட்ட, ரத்தம் சிந்தப்படாத தண்டனை முறையாக இருந்ததால் எல்லாக்காலங்களிலும் எல்லாத் நாடுகளிலும் அதிகம் நிறைவேற்றப்பட்ட தண்டனை முறையாகும். இதுவரை 5 லட்சம் பேர் தூக்கில் இடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டனின் காலனி நாடுகள், ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் தூக்கு தண்டனையே அதிகம் நிறைவேற்றப்பட்டது.
ஹிட்லரின் ஜெர்மனியிலும், சதாம் ஹுசேனின் ஈராக்கிலும் ஆயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர். இறுதியாக 2010ம் ஆண்டு சதாம் ஹுசேனும் அமெரிக்கப் படைகளால் தூக்கிலடப்பட்டார்.
இவற்றைத் தவிர யானையை வைத்து தலையை நசுக்கிக்கொல்லுதல், குடலை உறுவிக்கொல்லுதல், தோலை உறித்தல், கழுத்தை நெறித்தல், கழுவேற்றுதல், மண்ணுக்குள் உயிரோடு புதைத்தல், விசம் கொடுத்துக்கொல்லுதல், பட்டினி போட்டுக்கொலை செய்தல், மலையில் இருந்து தள்ளிவிடுதல், கல்லைக் கட்டி கடலில் போடுதல், கழுத்தில் டயர் கட்டி நெருப்பு வைத்தல் என்று இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் இனக்குழுக்களாக இருந்த போதும், மன்னராட்சியின் போதும், குடியாட்சியின் போதும் மனித இனம் நீதியை நிலை நாட்ட வேண்டி மரண தண்டனை என்ற பெயரில் பல கொடி சக மனிதர்களைக் கொன்று குவித்திருக்கிறது.
இந்தியாவில் மரண தண்டனை
தண்டனை பற்றிய பயமும் தவறு செய்தால் உயிர் பறி போகும் என்ற நடுக்கமுமே மனிதர்களை குற்றம் புரிவதிலிருந்து தடுக்கும் என்கிறது மனு தர்மம்.
குற்றம் புரியாதவனுக்கு மரண தண்டனை கொடுப்பது எத்தகைய பாவச்செயலோ அது போல் குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை கொடுக்காமல் இருப்பதும் பாவச்செயலே என்கிறது கீதை.
இந்தியக் கடவுள்களில் பல தீய சக்திகளை தீர்த்துக் கட்டுவதில் பெரும் முனைப்பு காட்டுவதை நம் கதைகளில், இதிகாசங்களில், புராணங்களில் காணலாம். அழித்தல் என்பதே தொழிலாக ஒரு கடவுள் இருப்பதையும் குற்றம் புரிந்தவர்கள் கடவுளின் அவதாரத்தினால் கொலை செய்யப்பட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும் என்கிற கதைகளை ராமாயணம், மகாபாரத்தில் வழியே நாம் காணலாம்.
பொளத்தம், சமணம், சூஃபிக்கள் மற்றும் வள்ளலார் போன்ற சிந்தனைகள் சமாதானம், அமைதி, மன்னிப்பு என பேசினாலும் வன்முறையான தீர்வே குற்றம் மட்டும் தண்டனை பற்றிய இந்திய அரசுகளின் பார்வையின் பின்புலமாக இருந்திருக்கிறது. மொகலாயர்களுக்கு முன்பு ஆண்ட சைவ, வைணவ மற்றும் பிற இந்திய மதங்களின் சார்பு கொண்ட பேரரசர்களும், சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும், திருட்டு, கொள்ளை, பாலியல் விதிமீறல்கள், பலாத்காரம், கடத்தல், துரோகம், குடி, பிராமணனை வதைத்தல் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றி யிருக்கின்றனர். மொகலாயர்களும் ராஜ துரோகம், புரட்சி, மன்னரை அல்லது ஆட்சியை எதிர்ப்பது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை முறைகளை நிறைவேற்றி வன்முறை பாரமபரியத்தைத் தொடர்ந்தனர்.
தலையைத் துண்டாக வெட்டுதல், கழுவிலேற்றுதல், யானைக்கொண்டு மிதித்தல், கடலில் கல்லைக்கட்டித் தூக்கிப் போடுதல், தூக்கில் போடுதல், துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லுதல், பீரங்கியில் கட்டி உடலைச் சிதறச்செய்தல், தோலை உறித்தல், கழுத்தை நெறித்தல், காதில் ஈயைத்தைக் காய்ச்சி ஊற்றுதல், பட்டினி போடுதல், விசம் கொடுத்தல் போன்ற மரண தண்டனை முறைகள் பல மன்னர்களாலும் பல தேசங்களிலும் நாட்டின் எதிரிகள் மீதும், துரோகம், கொலை, பலாத்காரம், கொள்ளை, புரட்சி செய்தல், மாற்றுக்கருத்து, மன்னருக்கு அடிபணிய மறுப்பு, வரி கொடுக்க மறுப்பு போன்ற குற்றங்களுக்கு நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.
பிரிட்டானிய காலனிய ஆட்சிக்கு முன்பு பார்ப்பனர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கும், பிரிட்டானியர் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாக் காலங்களிலும் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆயிரக்கணக்கானோர் பிரிட்டானிய காலனிய ஆட்சியில் இந்திய விடுதலைக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆயுதமேந்தியோ அமைதியான முறையிலோ போராடியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டோ, தூக்கில் போடப்பட்டோ மரண தண்டனைக்குப் பலியாகியிருக்கின்றனர்.
பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, குதிராம் போஸ், அகமதுல்லா, யாஹியா அலி, அமீர் சந்த் மாஸ்டர், ஆரூர் சிங், ராம் பிரசாத் பிஸ்மில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், என்று ஆயிரக்கணக்கானோர் வெள்ளையரினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டனர்.
விடுதலைக்கு பின்பு
காலனிய பிரிட்டானிய அரசு பயன்படுத்திய பெரும்பாலான சட்டங்களே விடுதலைக்குப் பின்பு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக இந்தியக் குற்றவியல் சட்டம் 1860 மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1898 ஆகியனவற்றின் கீழ் மரண தண்டனை என்பது வழக்கமாகவும் ஆயுள் தண்டனை என்பது விலக்காகவும் கருதப்பட்டன. இந்தச் சட்டங்களின் படி ஏன் மரண தண்டனை ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுக்கவில்லை என்று நீதிபதி விளக்கம் தரவேண்டும். கொலை செய்தாலே தூக்கு என்பதே சுதந்தர இந்தியாவில் நிலவியது.
1975ல் புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு மரண தண்டனை என்பது ஒரு விலக்காகவும் ஒரு நீதிபதி மரண தண்டனை கொடுத்தால் ஏன் கொடுக்கிறார் என்பதற்கு அவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற சூழல் உருவானது. 1980ல் பச்சன் சிங் வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பில் மரண தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்கில் தான் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கிருச்ணய்யர், பகவதி ஆகிய நீதிபதிகள் கொண்ட 4 நீதிபதிகள் பென்ச் வலியுறுத்தியது.
அதன்படி உச்சநீதிமன்றம் தான் செயல்படுகிறதே ஒழிய மாவட்ட நீதிமன்றங்களிலும் மாநில உயர்நீதிமன்றங்களிலும் தூக்கு தண்டனைகள் எந்தக்குறைவும் இல்லாமல் அள்ளி வழங்கப்படுகின்றன.
இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை 4000க்கும் மேற்பட்டவர்களைத் தூக்கில் போட்டு கொலை செய்திருக்கிறது என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அரசியல் காரணங்களுக்காகவே கொலை செய்யப் பட்டிருக்கின்றனர்.
2010ம் ஆண்டு 105 பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
20க்கும் மேற்பட்டவர்களின் கருணை மனுக்கள் இந்திய ஜனாதிபதியிடம் காத்திருக்கின்றன. ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் கருணை மனு நிராகரிக்கப்ப்ட்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 1860ன் படி இந்தியாவில் பின்வரும் 9 குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படலாம்.
1) தேச துரோகம் -இந்திய அரசாங்கத்திற்கெதிரான போர் புரிந்தால்
2) ஆயதமேந்தி நடத்தப்பட்ட கலகத்திற்கு புரட்சிக்கு ஆதரவு
3) அப்பாவி ஒருவருக்கு மரண தண்டனை கிடைக்கக் காரணமான பொய் சாட்சி கூறுதல்
4) ஒருவரை மிரட்டி, தூண்டி பொய் சாட்சி கூறவைத்து அதன் மூலம் ஒரு அப்பாவிக்கு மரண தண்டனை கிடைத்தால்
5) கொலை
6) வயதுக்கு வராதவர் அல்லது போதையில் இருப்பவர் அல்லது மனநோயாளி இவர்களில் யாரையாவது தற்கொலை செய்யத் தூண்டினால்
7) ஆயுள் தண்டனை கைதி ஒருவர் கொலை செய்ய முயன்றால்
8) பிணைக்கு யாரையாவது கடத்தினால்
9) கொலையுடன் கூடிய கொள்ளை
இவற்றைத்தவிர 12 சிறப்புச்சட்டங்களின் கீழ் இந்தியப் பாதுகாப்பு, ஆயுதப் பரவலாக்கல் தடுப்பு, சாதிய வன்முறை தடுப்பு, உடன்கட்டை ஏறுதல் தடுப்பு, தீவிர வாதச்செயல் தடுப்பு என்று பல காரணங்களுக்காகவும் மரண தண்டனை கொடுக்கப்படலாம். மகாராச்ட்ரா, ஆந்திரா, ஒரிசா, சத்திஸ்கர் போன்ற மாநிலங்கள் தமக்கென்று தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் கொண்டுவந்துள்ளன. அவற்றின் கீழும் மரண தண்டனை வழங்கப்படலாம்.
இன்னும் நிறையக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் பல நீதிபதிகளே சொல்லி வருகின்றனர். போலி மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல்துறையினர் நடத்தும் கொலைகளுக்கும் மரண தண்டனை தரவேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் காவல்துறையில் ஒரு புகாரைப் பதிவு செய்வதில் இருந்து, புலனாய்வு, விசாரணை, தீர்ப்பு, மேல்முறையீடு ஆகிய பல நிலைகளில் பாரபட்சமின்றி எதுவும் நடப்பதில்லை. சாதி, இனம், வர்க்கம், மொழி, அந்தஸ்து, பால், மதம் எனும் பல கூறுகள் தீர்ப்புகளைத் தீர்மானிக்கின்றன.
ஒரே வகையான குற்றத்திற்கு பல விதமான தீர்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஒரே வழக்கில் ஒரே குற்றத்திற்கு இருவரில் ஒருவருக்கு மரண தண்டனை; மற்றோருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மிகக்கொடூரமான குற்றங்களுக்கு வழக்கே பல சமயங்களில் பதிவு செய்யப்படுவதில்லை. மரண தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்கில் தான் கொடுக்கப்படவேண்டும் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டாலும் எது அரிதினும் அரிதான வழக்கு என்பதை ஒரு நீதிபதியோ அல்லது நீதிபதிகள் அடங்கிய குழுவோ மட்டும் தீர்மானித்தல் என்பது நடுநிலையானதாக இருக்கமுடியாது.
அரசின் கொள்கைகள், பொது மக்கள் மத்தியில் நிலவும் மனநிலை, ஊடகங்களின் அழுத்தம், நீதிபதிகள் மற்றும் காவல்துறையினரின் சாதிய, மதவெறி, மற்றும் ஆணாதிக்க சார்புநிலை போன்றவற்றின் தாக்குதலினால் குற்றம் புரிந்தவர்களும் குற்றம் புரியாதவர்களும், வேடிக்கை பார்த்தவர்களும், உடன் பயணித்தவர்களும் இன்று தூக்குக் கயிற்றின் கீழ் தண்டனைக்குக் காத்திருக்கின்றனர். உங்களுக்கும் எனக்கும் மரண தண்டனை கிடைக்காமல் இருப்பதற்கு அதிர்ச்டம் ஒன்றே காரணம். குலுக்கல் முறையில் நமது பெயர் வராமல் இருக்கவேண்டும்.
உலகில் இப்பொது மரண தண்டனை
2010 டிசம்பரில் ஐக்கிய நாடுகளின் சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர் நாடுகள் அத்தீர்மானத்தை வரவேற்றன.
1960களில் தொடங்கி ஐக்கிய நாடுகள் சபையின் தொடர் முயற்சியின் விளைவாக பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் கையெழுத்தாகி உலகில் 139 நாடுகளில் இன்று மரண தண்டனை நடைமுறையில் இல்லை. அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.
23 நாடுகளில் தான் மரண தண்டனை 2010ல் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் 46 பேருக்கும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கும் வட கொரியாவில் 60 பேருக்கும் செளதி அரேபியாவில் 27 பேருக்கும் கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை. ஆப்ரிக்காவில் ஒரு சில நாடுகளில் தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆசியாவில் தான் அதிக நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
மரண தண்டனைக்கு எதிரான வாதங்கள்
1) மரண தண்டனை ஆகக்கொடூரமான, மனிதத்தன்மையற்ற, மனித மாண்பை அழிக்கும் தண்டனை
2) மரண தண்டனையால் குற்றங்கள் குறைந்ததாக சான்றுகள் உலகில் எங்கும் இல்லை.
3) பாரபட்சமாக ஏழைகள், மத, இன, மொழி சிறுபான்மையினர்களுக்குத் தான் அதிகம் மரண தண்டனை வழங்கப்படுகிறது.
4) அரசியல் மாற்றுக் கருத்தை ஒடுக்குவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது.
5) மரண தண்டனை வழங்கப்படுவதில், நிறைவேற்றப்படுவதில் ஒரு நீதியில்லை. வரம்புகளோ, அறமோ, ஒழுங்கோ இன்றி தான்தோன்றித் தனமாக வழங்கப்படுகிறது.
6) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் திரும்பப்பெறமுடியாது. நிரபராதிகள் அநியாயமாகக் கொல்லப்படுவார்கள்.
7) மரண தண்டனை ஒரு குறுக்குவழி. சரியான தீர்வு மன்னித்தல், திருந்துதல் மற்றும் மறுவாழ்வு தான்.
8) யாருடைய உயிரை எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. அது அரசாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் சரி.
இந்தியாவில் மரண தண்டனை வழங்குவது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இந்தியா ஐநாவின் மரண தண்டனைக்கு எதிரான எந்த தீர்மானத்தையும் ஒப்பந்தங்களையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
No comments:
Post a Comment