Monday, December 13, 2021

ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் - நேர்காணல் : பி.பீட்டர் துரைராஜ்

"பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது"

ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் - நேர்காணல் : பி.பீட்டர் துரைராஜ்

===========================


அமுதன் ராமலிங்கம் புஷ்பம் (1971) ஊடகத்துறையில் ஒரு முக்கியமான ஆளுமை. கடந்த 25 ஆண்டுகளாக ஆவணப்படம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும்  அவர் காக்கைச் சிறகினிலே இதழுக்காக கொடுத்த  சிறப்பு நேர்காணல் இது. அவரை நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் துரைராஜ்).

கேள்வி : வெகு ஆண்டுகளாக மறுபக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறீர்கள் ? இது பற்றி சொல்லுங்களேன் ?


பதில் : பெரும்பாலான ஊடகங்கள் அரசு சார்பாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளன. நேர்மையாகவும், எளிமையாகவும், குறைந்த செலவிலும் நேரடியாக மக்களிடம் கருத்துச் சொல்லும் சாத்தியம் ஆவணப்படங்களில் உள்ளது. மாற்று ஊடகமாகவும், சரியான வடிவமாகவும் இருப்பது ஆவணப்படங்கள். 'மறுபக்கம்' என்ற அமைப்பை 1994 ல் மதுரையில் சில நண்பர்களோடு தொடங்கினோம். தொலைக்காட்சி,VCP, VCR ஐ பயன்படுத்தி அப்போது படங்களை திரையிட்டோம். இந்த 25 வருடங்களில் நூற்றுக்கணக்கான திரையிடல்கள் நடந்துள்ளன.

கேள்வி:மதுரை திரைப்பட விழாவை வெகு ஆண்டுகளாக நடத்தி வருகிறீர்கள் .இது பற்றி ?

பதில்: 1998 ல் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்கள் நடந்தன. மதுரையில் 1998 ல் அணுசக்தி  எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்தினோம். கருத்தரங்குடன் சேர்ந்து திரைப்பட விழாவும் நடந்தது. அப்போது கிடைத்த ஆதரவினால் தொடர்ந்து திரைப்படவிழாக்கள் நடத்தத் தொடங்கினோம். அது வருடாந்தர விழாவாக உருவெடுத்தது.

கேரளாவில் இருந்த ஆவணப்பட இயக்குநர் சரத் சந்திரன் படங்கள், புராஜெக்ட்டர் போன்றவை தந்து உடன் இருந்து வழிகாட்டுவார். இப்போது அவர் இல்லை;இறந்துவிட்டார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த ஆளுமை.அதற்கு முன்னரே மதுரையில் 'யதார்த்தா','வைகை'  போன்ற பிலிம் சொசைட்டிகள் போன்றவை இருந்தன. இன்னும் யதார்த்தா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நாங்கள் அந்தப் பாரம்பரியத்தை தொடர்ந்து செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவத்தில் மதுரை பன்னாட்டு ஆவணப்படவிழா நடக்கும். இதற்கு பல அமைப்புகள், குழுக்கள், பிலிம் சொசைட்டிகள்,நாடகக்குழுக்கள் உதவி செய்து வருகின்றன.எல்லாவிதமான சாத்தியங்களையும் செய்து பார்த்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். 

அரசு நடத்துகின்ற விழாவைத் தவிர்த்துப் பார்த்தால்,இந்தியாவில் நடைபெறும் மூத்த திரைப்பட விழா இதுவென்று சொல்ல  வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

இதில் 50 முதல் 80  வரையிலான ஆவணப்படங்களை திரையிடுவோம்.இதில் நம்நாட்டு ஆவணப்படங்களும் வெளிநாட்டு  படங்களும் திரையிடப்படும்.படத்தை இயக்கியவர்கள் குறைந்த பட்சம் ஐந்து பேர் (பத்து பேர் வரை) தங்கள் படங்களை திரையிட்டு பார்வையாளர்களோடு கலந்துரையாடுவர்.அவர்களுக்கும் ஒரு accountability இருக்கும். பார்வையாளர்களும் படத்தை எடுப்பவர்களின் ஆளுமை,புரிதல்,தொடர்பு போன்றவைகளை தெரிந்து கொள்வர்.நண்பர்கள், அமைப்புகள் உதவி செய்வதால் செலவும் பெரிதாக ஆகாது. சில கல்லூரிகள் இடம் தரும்;சிலர் சாதனங்களை இலவசமாக தருவர்;ஒரு சிலர் போக்குவரத்து செலவுகளை ஏற்றுக் கொள்ளுவார்கள்.இப்படி மக்கள் பங்கேற்பு இதில்  இருக்கிறது.

இந்த திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். இதற்கான வேலைகளை மூன்று மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கி விடுவோம்.இதற்காக ஆவணப்படங்களை பெறுவோம்.அவை இரண்டு ஆண்டுகளுக்குள்  வெளிவந்தவையாக  இருக்க வேண்டும்.100 முதல் 150 வரை படங்கள் வரும்.அதில் 30 படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுவோம்.இதுமட்டுமின்றி திரும்பிப் பார்த்தல் (Retrospective ) என்ற அமர்வில் மூத்த இயக்குநர்களின்  படங்கள்; குறிப்பிட்ட நாட்டுப் படங்கள் ,குறிப்பிட்ட தலைப்பில் (சமூக நீதி,சுற்றுச்சூழல், ஆளுமை,மனித உரிமை போல)படங்களை திரையிடுவோம். இது ஒரு முக்கியமான பண்பாட்டு அசைவு நடவடிக்கைதான்.

கேள்வி: ஆவணப்படங்களுக்கு ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் தருகின்றன என்று நினைக்கிறீர்களா ? 

பதில் :போதுமான வரவேற்பு இருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் மதுரை திரைப்படவிழா பற்றி நான்கு,ஐந்து பத்திரிக்கைகளாவது செய்தி வெளியிடுகின்றன.எனக்கு இது குறித்து புகார் ஏதுமில்லை. ஏனெனில் ஆவணப்படங்கள் வெகுசன வடிவம் இல்லை. தீவிர வாசகரை மையமாக வைத்தே இயங்குகின்றன. பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது. பத்திரிகைகள் நான் சொல்லுவதை மேற்கோள் காட்டுகின்றன; செய்தி வெளியிடுகின்றன. எனவே ஊடகங்கள் குறித்து எனக்கு வருத்தமில்லை.

கேள்வி: நீங்கள் 1997 ல் லீலாவதி என்ற முதல் ஆவணப்படத்தை எடுத்து இருக்கிறீர்கள்.'தீவிரவாதிகள்'' பீ','மெர்குரி(Mercury in the Mist),Radiation Stories  போன்ற ஆவணப்படங்களை இதுவரை இயக்கி இருக்கிறீர்கள்.இந்தத் துறையில் ஒரு கவனம் கொள்ளத்தக்க ஆளுமையாக இருக்கிறீர்கள்.உங்களுடைய முன்னோடி என்று யாரையும் சொல்ல முடியுமா ?

பதில்:நிறைய பேர்  ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.ஆனந்த் பட்வர்தன் ,சிலி நாட்டைச் சார்ந்த பேட்ரிசியோ குஸ்மான்(Patricio Guzman) , ஆஸ்திரேலியாவைச்  சார்ந்த டென்னிஸ் ஓர்க் (Dennis O' Rourke ),தீபா தன்ராஜ் (பெங்களூர்),கே.பி.சசி(பெங்களூர்),  குட்டி ஜப்பானின் குழந்தைகள்(சிவகாசிபற்றி படம் ) எடுத்த சலம் பென்னுராக்கர்(Chalam Bennurkar) போன்றவர்கள் எனக்குள் ஆரம்ப காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள்.போலந்து நாட்டைச் சார்ந்த கீஸ்லோவ்ஸ்கி (Krzysztof Kieslowski) எனக்குப் பிடித்தமானவர். நான் தற்போது  நெருக்கமாக உணர்வது அமெரிக்கா வைச்சார்த்த பிரெடெரிக் வைஸ்மேன்- தான்.(Frederick Wiseman).அவரது ரசிகர் நான். எனது ஆவணப்பட முயற்சிகள் என்னை அறியாமல் அவரை ஒத்து இருக்கின்றன.

கேள்வி: உங்களுக்கு திராவிடர் கழகம் 'பெரியார் விருது' கொடுத்துள்ளது .அதைப் பற்றி ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில் : தமிழக, இந்திய அரசியலை தீர்மானிக்கிற அம்சமாக திராவிட அரசியல் இருக்கிறது. தமிழக அரசியலில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், அரசியல் போக்குகள்,வளர்ச்சித் திட்டங்கள்,மாநிலம் போகும் திசை,தமிழ்நாட்டின் வாழ்க்கைத் தரம் போன்றவற்றை திராவிட அரசியல் தீர்மானிக்கிறது. அதன் ஊற்று திராவிட அரசியல். எனவே தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் எனக்கு 'பெரியார் விருது' வழங்கியதை(2017)  மிகுந்த மரியாதையோடு ஏற்றுக் கொள்கிறேன். இதை நான் சரியான திசைவழியில்தான் சென்று கொண்டிருக்கிறேன் என்பதற்கான அடையாளமாக கருதுகிறேன்.

 'பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை'யுடன் இணைந்து திரையிடல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.வருகிற ஏப்ரல் 12 முதல் 14 வரை சமூக நீதி திரைப்பட விழா , பெரியார் திடலில் நடத்த உள்ளோம்.

கேள்வி:'என்சாதி' என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறீர்கள்! இதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

பதில் : மோடியை பிரதம மந்திரி வேட்பாளராக 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அறிவித்த போது நான் திகைப்பு அடைந்தேன். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். வன்முறை அரசியல் மீதான நம்பிக்கை, சர்வாதிகார குணம் கொண்டவர் மோடி. வெளிப்படைத்தன்மை, ஜனநாயகம், உரையாடல், நெகிழ்வுத் தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்காதவர்.முரட்டு அரசியலை கடைபிடிப்பவர்.முதலமைச்சராக இருந்தபோது ,கார்ப்பரேட்டுகளுக்காக தன் மாநில பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டவர்.இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட ஒருவரை இந்திய சிவில் சமூகம்  பிரதம மந்திரி வேட்பாளராக ஒத்துக் கொண்டதை ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக கருதினேன்.இது எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.'மோடி போல ஒரு நபர் வேண்டும்' என்ற எண்ணம் மக்களுக்கும் உள்ளதோ என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில் அவர் எதிர்ப்பு இல்லாமல் இருக்கிறார். இங்கு நடக்கும் பல குற்றங்களுக்கு குற்றவாளி எண் ஒன்றாக( A.1 ) மோடி இருந்தால் அக்குற்றத்திற்கு துனைநிற்பவர்களின்  பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். அதிகாரவர்க்கம், ஊடகம்,தொழில் அதிபர்கள் என பலர் அதில்  உண்டு.அந்தப் பட்டியலில்  அக்குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் அடக்கம்.

குற்றத்தை செய்வதை விட அதனை ஆதரிக்கிற,அங்கீகரிக்கிற, பாதுகாக்கிற மனநிலையைப்  பற்றித்தான்  பேச வேண்டும் என்று தோன்றியது.'Consensus', 'Hegemony' ,என்ற கருதுகோள் களின் அடிப்படையில் குற்றங்கள் நடைபெறுகின்றன.'ஒத்தக் கருத்தை உருவாக்கி ஆதரிக்கச் செய்வது' என்று அந்தோனியா கிராம்சி சொல்வதை நாம்  புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரமும் வன்முறையைப் பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தப்படுவதில்லை.ஒத்தக் கருத்தை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களையே அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் இதன் அடிப்படை. இதைத்தான் 'குஜராத் மாடல்' என்று சொல்லுகிறோம்.இதனுடைய வடிவம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் குஜராத்திற்கு முன்பே இருக்கிறது.திருப்பூரில் அதுதான் நடைபெறுகிறது. அதை வைத்துத்தான் நான் 'டாலர் சிட்டி'(Dollar City) என்ற ஆவணப்படத்தை  எடுத்தேன்.தொழிலாளர்களை நசுக்கி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி தொழில் அதிபர்கள் சுரண்டுவதுதான் திருப்பூரில் நடக்கிறது.

இந்த டாலர் சிட்டியின் தொடர்ச்சிதான், இப்போது நான் எடுத்துக் கொண்டு இருக்கும் 'என் சாதி' (My Caste) என்கிற படம் சாதி பற்றி நாம் கொண்டுள்ள  மயக்கம்,போலித்தனம்,வேடம்,சமரசம், வெற்று முழக்கம் பற்றி  பேசும். ஒடுக்குமுறை வெளியில் தெரிகிறது. ஆனால்  அதன் பின்னால் இருக்கும் சிந்தனை ஆபத்தானது. அது நம் கவனத்துக்கு உரியது. சாதியை காப்பாற்றுகிற,அங்கீகரிக்கிற, கொண்டாடுகிற மனநிலையை அல்லது அதை மெளனமாகக் கடந்து போகும் மனநிலையை இப்போது நான் எடுத்துக் கொண்டு இருக்கிற ஆவணப்படம் பேசும்.

கேள்வி: உங்களுக்கு நியூஸ் 18 தொலைக்காட்சி கடந்த ஆண்டு 'மகுடம் விருது' கொடுத்ததே ?

பதில்: நியூஸ் 18 எனக்குப் பிடித்த தொலைக்காட்சி. குணசேகரன் போன்ற ஒரு நல்ல ஊடகவியலாளர் அதன் தலைமைப் பொறுப்பில் பணி புரிகிறார். இது போன்ற விருது என்னை பலரிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். என் வீட்டில் உள்ளவர்கள் பொறுத்துக் கொண்டு என்னை என் போக்கில் வேலை செய்ய அனுமதிக்கின்றனர்.அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும். ஆகவே இது போன்ற விருதுகள் என் குடும்பத்தாரையும் என்னை ஆதரிப்போரையும் என் தோழர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.

கேள்வி:நீங்கள் எடுக்கும் ஆவணப்படங்களுக்கு தயாரிப்புச் செலவு எப்படி கிடைக்கிறது ?

பதில்:இதுவரை நான் 19 ஆவணப்படங்கள் எடுத்துள்ளேன்.இதில் டாலர் சிட்டி என்ற படத்தை மட்டும் ராஜ் கஜேந்திரா  என்ற நண்பர் என் மீது கொண்ட அன்பின் காரணமாக தயாரித்தார். மற்ற படங்களுக்கு நண்பர்கள், தோழமைகள்தான் பங்களிப்பு செய்துள்ளனர். இதை ஒரு கொள்கையாகவே நான் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகிறேன். தனிநபர்களோ நிறுவனங்களோ நிதி உதவி செய்தால் கூட பத்தாயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நன்கொடை பெறுவதில்லை என்பதும் ஒரு கொள்கை முடிவு தான். 

கேள்வி: உங்கள் குடும்பம் பற்றி ?

பதில்: மனைவி தாக்‌ஷா, சினிமா, விளம்பரப் படங்களுக்கான உடை அலங்கார designer ஆக இருக்கிறார்.

கேள்வி: தமிழ்நாட்டில் ஆவணப்படம் எப்படி இருக்கிறது ?

பதில் : மிக நன்றாக இருக்கிறது. அரசியல், கலை,வரலாற்றுப்படம்,ஆளுமைகள் என பன்முகத்தன்மை கொண்ட ஆரோக்கியமான சூழலில் பலரது ஆவணப்படங்கள் உருவாகி வருகின்றன. இது போன்ற ஒரு வெரைட்டி மற்ற மாநிலங்களில் இல்லை. தில்லி,மும்பை,கல்கத்தா போன்ற நகரங்களில் ஆவணப்படங்கள் வெளியாகின்றன. அது வேறு தளம். 

கேள்வி:நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

பதில் : நான் ஒரு Documentary Activist (ஆவணப்பட செயற்பாட்டாளர்) ஆக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.Film Maker (படத்தை எடுப்பவர்),Curator (படங்களைச் சேகரித்து, தேர்ந்தெடுத்து, தொகுத்து வழங்குபவர்), Organiser (திரையிடல்களை நடத்துபவர்), Teacher(ஆவணப்படங்கள் பற்றி வகுப்பு எடுப்பவர்) ஆக இருக்கிறேன். இதில் எனது நேரம்,கவனம், உழைப்பு,பங்கை கடந்த 25 ஆண்டுகளாக செலுத்தி வருகிறேன்.

தமிழ்நாட்டுக்கு வெளியேயும் இந்தியா முழுக்க பயணம் செய்து ஆவணப்படவிழாக்களை நடத்தி வருகிறேன். நிறைய விழாக்களில் தேர்வுக்குழு உறுப்பினராகவும், நடுவராகவும் பங்காற்றி வருகிறேன். சென்ற ஆண்டு கூட ஜெர்மனியில் ப்ராங்க்பர்ட் நகரில் நடந்த ஒரு பன்னாட்டு ஆவணப்படவிழாவில் நடுவர் குழு உறுப்பினராகக் கலந்து கொண்டேன்.

கேள்வி: நீங்கள் Court,Fandry, ஒழிவு திவசத்தே களி போன்ற புனைவுப்படங்களை(Feature film) திரையிட்டு வருகிறீர்கள் ? 

பதில்: மறுபக்கம் சார்பாக புனைவு படங்களையும் அவ்வப்போது திரையிட்டுள்ளோம். சமீபத்தில் 'படப்பெட்டி திரைப்பட இயக்கம்" சார்பாக கவனிக்கப் படாத, திரைக்கு வந்த புனைவுப் படங்களை  திரையிட்டு வருகிறோம்.கடந்த மாதம் கூட மதுபானக் கடை ,கடைசி தரிப்பிடம் (The last Halt - இலங்கை) என்ற படங்களை திரையிட்டோம். இந்நிகழ்வுகளில் அந்தப் படங்களின் இயக்குநர்களும் கலந்து கொண்டனர். அவர்களோடு கலந்துரையாடல் நடத்துவதுதான் இந்நிகழ்வுகளின் முக்கிய அம்சம்.

கேள்வி: மாதாந்திர திரையிடல் செய்து வந்தீர்களே ? 

பதில்: மதுரையிலிருந்து 2008 ல் சென்னைக்கு வந்தேன். தொடக்கத்தில் முனைவர் எம்.டி.முத்துக்குமாரசாமி தாம் பணியாற்றும் National Folklore Support Centreல் மாதாந்தர திரையிடல் நடத்த இடம் கொடுத்தார். பின்பு அண்ணாசாலை புக்பாயிண்ட்டில் திரையிடல் செய்தோம். பேரா வீ.அரசு உதவியால் சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகள் திரையிட்டோம்.  பிறகு பனுவல் புத்தக நிலையம், டிஸ்கவரி புக் பேலஸ், பெரியார் திடல் என தொடர்ந்து திரையிட்டு வருகிறோம். பேரா மணிவண்ணன், பேரா ரவீந்திரன் ஆகியோர் எங்களுக்குத் துணை நிற்கின்றனர். அவர்களது துறைகளிலும் திரையிடல்கள் நடத்துகிறோம். சமீப காலமாக மாக்ஸ் முல்லர் பவனிலும் திரையிடல்கள் நடத்துகிறோம்.

இது மட்டுமின்றி சமூகநீதி, காடு, இசை போன்ற தலைப்புகளின் கீழ் சிறப்புத் திரைப்படவிழாக்களும் சென்னைப் பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழாவையும் (ஏழாவது ஆண்டாக) பல்வேறு கல்லூரிகள், தோழமை அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தி வருகிறோம்.

கேள்வி: உங்களது ஆவணப்படத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம்  ஒருவர் பெற்றுள்ளாராமே ? 

பதில்: ஸ்வேதா கிஷோர்(Shweta Kishore) என்ற பெண்மணி , இந்தியாவில் எடுக்கப்பட்ட மூன்று ஆவணப்படங்களை தனது முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அதில் ஒன்று  நான் எடுத்த 'செருப்பு'(தலீத் கிறிஸ்தவர் பற்றியது) என்ற ஆவணப்படம். இதற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.அது நூலாகவும்(Indian Documentary and Film Makers- Oxford University) வந்துள்ளது.எனது ஊடகப் பயணத்தில் இது ஒரு மைல் கல் எனலாம்.இது தவிர நிறைய பேர் ஆய்வு செய்துள்ளனர்.நான் எடுத்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு படத்தைப் பற்றி ஒரு ஆய்வுமாணவர் எழுதிஉள்ளார்.இதிலுள்ள பல விஷயங்கள் எனக்கே புதிதாக இருந்தது. நமது வேலையின் முக்கியத்துவத்தை இவர்கள் நமக்கு  உணர்த்துகிறார்கள்.

கேள்வி:வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள் ? 

பதில்: இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்கள் எல்லாவிதமான ஜனநாயக அமைப்புகளையும் சீர்குலைத்து விட்டார்கள்.திமுக,காங்கிரஸ் மீது நமக்குள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பாஜகவுடன் பேசவே முடியாது. பாஜக பேசுவது வெறுப்பு அரசியல், வன்முறை அரசியல், கார்ப்பரேட் அரசியல் மற்றும் சனாதன அரசியல். ஜனநாயகம் இருக்குமா என்ற அச்சமே இப்போது எழுகிறது. அது காப்பாற்றப்பட வேண்டும்.

========================================================================

Saturday, October 29, 2011

“தொடரும் நீதிக்கொலைகள்”

மரண தண்டனை மானுடத்திற்கே இழுக்கு!

1830ல் ஆளும் வெள்ளை பிரித்தானிய அரசால் இந்தியர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட வேலூர் மத்திய சிறை இந்திய சிறைகளில் மிகவும் பழமையான ஒன்று. அந்தமான் சிறைக்கு கடத்தப்பட முடியாத உடல் பலவீனமான கைதிகளை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வெள்ளை அரசாங்கம் இங்கு அடைத்து வைத்திருந்தது.

வேலூர் மத்திய சிறையில் இதற்கு முன்பு சிறைப்படுத்தப்பட்டிருந்த ராஜாஜி, VV கிரி, CN அண்ணாதுரை, காமராஜர், வினோபா பாவே, ஜெயேந்திர சரஸ்வதி ஆகிய பிரபலங்களுத்தைத் தொடர்ந்து சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் இங்கு அடைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரே வித்தியாசம் இவர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இம்மூன்று தமிழர்களின் கருணை மனுக்களை நிராகரித்ததன் விளைவாக 9 செப்டம்பர் 2011 அன்று தூக்கில் தொங்கவிடப்படவிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் எழுந்த தன்னெழுச்சியான போராட்டங்கள் தற்காலிகமாகக் காப்பாற்றியிருக்கின்றன.

ஆனால் இந்த மரண தண்டனை அறிவிப்பு, அதில் காட்டப்படும் மத்திய அரசின் துரிதம், அதை எதிர்த்து நிகழ்ந்த பல்வேறு போராட்டங்கள் தமிழர் மனதிலும் மனித உரிமையாளர் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

பாகம் -1
மரண தண்டனை
நீதியின் பெயரால் செய்யப்படும் கொலை

மனிதர்களே மனிதர்களை நீதியின் பெயரால், சட்டத்தில் பெயரால் பொது நன்மை கருதி செய்யும் கொலைகளே மரண தண்டனை.

மன்னிப்பு, மனம் திருந்துதல், மறுவாழ்வு போன்றவற்றில் நம்பிக்கையில்லாது பழிக்குப்பழி வாங்குவதே மரண தண்டனையின் பின்னால் மறைந்திருக்கும் மனநிலை.

மரண தண்டனை மனித வரலாற்றில் பல காரணங்களுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

ஏதன்ஸ் நகரத்தின் இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச்சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு சாக்ரடீஸ் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.

யேசு நாதர் யூத மன்னனுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார்.

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் ஐரோப்பியர்களுக்கு தங்களது நிலத்தைத் தாரை வார்க்க மறுத்த குற்றத்திற்காக லட்சக்கணக்கில் விதம் விதமாகக் கொலை செய்யப்பட்டனர்.

கறுப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலத்தில் வெள்ளைக் கார முதலாளிகளுக்கு எதிராக செய்யப்படும் எச்செயலும் மரண தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஐரோப்பாவில் சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு லட்சக்கணக்கில் பெண்கள் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர்.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் பிரிட்டானிய ஆட்சியருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக தூக்கிலடப்பட்டனர்.

கோவலன் பாண்டிய மன்னனின் மனைவியின் கால் சலங்கையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டான்.

இந்தியாவில் சமணர்கள் ஆயிரக்கணக்கில் கழுவேற்றப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாறும் உண்டு.

கி.மு.16ம் நூற்றாண்டில் எகிப்து நாட்டில் மந்திரம் தந்திரம் புரிந்ததற்காக ஒருவரின் கழுத்தை கோடாரியால் வெட்டி மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவே வரலாற்றில் பதிவான முதல் மரண தண்டனை என்று கருதப்படுகிறது.

கொலை, திருட்டு, கொள்ளை, ராஜ துரோகம், கடத்தல், போர் குற்றங்கள், காதல், பலாத்காரம், பேச்சு, எழுத்து, மாற்றுக்கருத்து என்ற பல காரணங்களுக்காக குற்றம் புரிந்ததாகக் கருதப்படுவர்களும், நிரபராதிகளும், ஆண்களும் பெண்களுமாய் இதுவரை கோடிக்கணக்கானோர் இப்பூமியில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருப்பர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலகாலகட்டங்களில் பலவிதமாக பலகருவிகளைக் கொண்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அக்கொலை முறைகளை நாங்கள் இந்த ஆவணப்படத்திற்காக ஆய்வு செய்கையில் அவை கொடுமையானதாக, அருவருப்பு அளிப்பதாக, மனித மாண்பை அழிப்பதாக இருந்தன. அவற்றில் சிலவற்றை நாங்கள் உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

தீயில் இட்டு எரித்துக் கொலை செய்தல்

மாற்றுக் கருத்து, தேச துரோகம், சூனியம் வைத்தல் ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் தியீல் இட்டு எரித்துக் கொலை செய்யப்படுகிறார். இத்தண்டனை முறை உலகெங்கும் பண்டைய காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை முறைகளில் வழமையான ஒன்றாகும். கொதிக்கும் ஈயத்தைக் காய்த்து குற்றம் சாட்டப்பட்டவரின் தொண்டையில் ஊற்றியும் பைபிள் காலத்தில் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் குவிக்கப்பட்ட கட்டைகளின் நடுவே நிறுத்தப்பட்டு கட்டிவைக்கப்பட்டு எரிக்கப்படுகிறார்.

மூட்டப்படும் நெருப்பு பலமாக இருக்குமெனில் புகையில் உருவாகும் கார்பன் மோனாக்சைட்டினால் மூச்சு முட்டி குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து போவார். நெருப்பு சிறிதாக இருக்குமெனில் குற்றம் சாட்டப்பட்டவர் படிப்படியாக எரிந்து அதிர்ச்சி, நெஞ்சு வலி, ரத்த இழப்பு மற்றும் முக்கிய பாகங்கள் சிதைந்து போவதாலும் இறந்து போவார்.

நெருப்பு மூட்டி கொலை செய்யும் தண்டனை சிரத்தையுடன் நிறைவேற்றப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் படிப்படியாக எரியும். முதலில் கால், தொடை, இடுப்பு ஆகியவை எரிந்து பின்பு கைகள், நெஞ்சு, முலைகள், கழுத்து, முகம் ஆகியன எரியும். தலை எரிந்து வெடித்துச் சிதறும் போது தான் மரணம் நிகழும். ஒருவர் நெருப்பில் எரிந்து சாவதற்கு சராசரியாக 2 மணி நேரம் பிடிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

18ம் நூற்றாண்டின் இறுதியில் நெருப்பில் இட்டு எரித்து தண்டனை கொடுக்கும் முறை படிப்படியாக உலகெங்கும் குறைந்துவிட்டது. அது மிகக்கொடூரமான தண்டனை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

சிலுவையில் அறைதல்:

சிலுவையில் அறைதல் என்பது ஒரு பழமையான, வலி மிகுந்த தண்டனை. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சிலுவையில் கட்டப்பட்டோ, ஆணி அறையப்பட்டோ சாகும் வரை தொடங்கவிடப்படுவார். கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் மத்தியில் இந்த தண்டனை முறை பயன்படுத்தப்பட்டது. ஜப்பானிலும் சிறு குற்றம் செய்தவரையும் கிறிஸ்தவர்களையும் சிலுவையில் அறைந்து மரண தண்டனை கொடுத்திருக்கின்றனர்.

வலி நிறைந்த, மெதுவான, கொடூரமான, அவமானப்படுத்தக்கூடிய, பொது இடத்தில் கொடுக்கப்படும் இத்தண்டனை பார்வையாளர்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கவும் நிறைவேற்றப்பட்டது. சில இடங்களில் மரத்தில் தொங்கவிடப்பட்டும், சில இடங்களில் ஒற்றைக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டும் சில இடங்களில் சிலுவை வடிவக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டும் தண்டனை கொடுக்கப்பட்டது.

சில வழக்குகளில் 135 கிலோ எடையுள்ள சிலுவையையும் குற்றம் சாட்டப்பட்டவர் சுமந்து செல்லவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது அறையப்படும் ஆணிகளும் விசத்தன்மை கொண்டதாகவிருக்கும். ஆணிகள் 13முதல் 17 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும்.

மேலும் சிலுவையில் அறையப்படுவோர் உடைகள் களையப்பட்டு நிர்வாணமாகத்தான் தொங்கவிடப்படுவர். இத்தாலியின் ப்ளாரன்ஸ் நகரத்து சாண்டோ ஸ்பிரிடோ ஆலயத்தில் இருக்கும் மைக்கலேஞ்சலோவின் க்ரூசிபிக்ஸ் என்ற சிலையில் நிர்வாணமாக பிறப்புறுப்புகள் வெளித்தெரிய சிலுவையில் தொங்கவிடும் காட்சி இருக்கிறது. எல்லோர் முன்பும் தான் சிலுவையில் தொங்குபவர் சிறுநீரோ அல்லது மலமோ கழிக்கமுடியும். சிலுவையில் தொங்கவிடப்படுவர்களில் கால்கள் இரும்புக் கம்பிகளால் அடித்து உடைக்கபடும். இதனால் வேதனை அதிகரிக்கும். மரணம் சீக்கிரம் நிகழும்.

சிலுவையில் தொங்கவிடப்பட்டவர் இறப்பதற்கு சில மணி நேரங்களோ சில நாட்களோ ஆகலாம். ரத்தம் வெளியேறுவதாலோ, மாரடைப்பாலோ, காயங்களில் ஆறாமல் சீழ் வடிவதாலோ, ஆணி அறைவதாலோ, பலமாகத் தாக்கப்படுவதாலோ சிலுவையில் தொங்கவிடப்படுபவருக்கு மரணம் நிகழும். சிலுவையில் தொங்கவிடப்பட்டவரின் உடல் அங்கேயே அழுகி, எலும்புக்கூடாகும் வரை அகற்றப்படமாட்டாது. கழுகுகளுக்குத் தான் அந்த உடல் உணவாகும். அந்த உடலுக்கு நல்லடக்கம் கிடைக்காது.

சிலுவையில் தொங்கவிடப்பட்டவரின் மரணத்தைத் துரிதப்படுத்துவதற்காக அவர் தொடர்ந்து காவலர்களால் கடுமையாகத் தாக்கப்படுவார். நெஞ்சு எலும்புகளை உடைப்பதும், இதயத்தினுள் கத்தியைப் பாய்ச்சுவதும், காலுக்குக் கீழே தீமுட்டுவதுமாய் வன்முறையில் ஈடுபடும் காவலர்கள் தொங்கவிடப்படுபவர் இறந்த பின் தான் அங்கிருந்து நகர்வர்.

ரோமானியர்களும் பாரசீகர்களும் மெசடோனியர்களும் சிலுவையில் அறைந்து தொங்கவிடும் தண்டனை முறையை நிறைவேற்றினர். அடிமைகளும் கொள்ளைக்காரர்களும், நாட்டின் எதிரிகளுமே சிலுவையில் தொங்கவிடப்படுவர். அதுவொரு ஆக அவமானம் நிறைந்த, இழிவான தண்டனையென கருதப்பட்டது. ரோம நாட்டின் குடிமக்கள் யாரும் சிலுவையில் தொங்கவிடப்பட மாட்டார்கள். அடிமைகள் கிளர்ச்சி செய்யாதிருக்க ஸ்பார்டகஸின் தோழர்கள் 6000 பேருக்கு சிலுவையில் தொங்கவிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ரோமானிய மன்னன் கான்டன்டைன், கி.பி.337ல் யேசு நாதரின் மீதிருந்த பற்று காரணமாக சிலுவையில் அறையும் தண்டனையை தடை செய்தார்.

ஜப்பானில் கிபி15ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தின் வருகைக்குப் பிறகு சிலுவையில் அறையும் தண்டனை 200 ஆண்டுகளுக்கு அதிகமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் நிறைவேற்றப்பட்டது. முதலாம் உலகப்போரிலும் இரண்டாம் உலகப்போரிலும் ஜெர்மானியர்களுக்கு எதிராகவும் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கல்லால் எறிந்து கொல்லுதல்

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பலர் சேர்ந்து சாகும் வரை கல்லால் எறியும் முறையான இத்தண்டனையில் யார் அந்த மரணத்தை விளைவித்தார் என்று சொல்ல முடியாது. ஒரு கூட்டமே சேர்ந்து கொடுக்கும் தண்டனை அது. மிகவும் வலி தரக்கூடிய மெதுவான தண்டனையை சித்தரவதை என்றும் அழைக்கலாம்.

இது ஒரு மிகப் பழைய தண்டனை முறை. கிரேக்கர்கள் காலத்தில் கிரேக்க மரபு சார்ந்த கதைகளில் கல்லால் எறிந்து கொலை செய்யும் தண்டனை முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஈடிபஸ் தனது தந்தையைத் தான் கொன்றுவிட்டதை அறிந்ததும் தன்னை கல்லால் எறிந்து கொலை செய்யுமாறு கேட்கிறான்.

லூசியஸ் சாடர்நினஸ் என்ற ரோமானிய சிந்தனையாளர் கொலை குற்றம் சாட்டப்பட்டு கிமு100ம் ஆண்டு கல்லால் எறிந்து கொலை செய்யப்படும் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.

விபச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை கல்லால் எறிந்து கொலை செய்ய முயலும் தனது சீடர்கள் அடங்கிய கூட்டத்தை யேசு நாதர் தடுத்து நிறுத்தியிருக்கிறார். “Let him who is without sin among you
ibe the first to throw a stone at her.” பாவமே செய்யாதவன் உங்களில் யாரோ அவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும் என்று சொன்னதும் எல்லோரும் விலகிப்போன சம்பவம் பைபிளில் உண்டு.

விலங்குகளோடு உறவு வைத்துக்கொள்ளுதல், திருமணம் நிச்சயிக்கப்பட்ட கன்னிப்பெண்ணோடு உறவு வைத்துக்கொள்ளுதல், தாயோடு, சித்தியோடு, மருமகளோடு உறவு வைத்துக்கொள்ளுதல், பெற்றோரைத் தூற்றுதல், பில்லி சூனியம், உருவ வழிபாடு, மதத்தை அவமரியாதை செய்தல், குழந்தைகளை நரபலி கொடுத்தல், குறி சொல்லுதல், கணவன் அல்லாதவருடன் ஒரு பெண் உறவு வைத்துக்கொள்ளுதல், பெண்கள் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளுதல், தந்தைக்கு எதிராக எதிராக செயல்படும் பெண்கள் ஆகியோருக்கு கிறிஸ்தவத்திற்கு முந்தைய யூதர்களின் காலத்தில் கல்லால் அடித்துக்கொலை செய்யும் தண்டனை முறை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய சரியத் சட்டப்படி திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு தற்போதும் ஆப்கானிஸ்தான், இந்தோனிசியா, ஈரான், ஈராக், செளதி அரேபியா, நைஜீரியா, சூடான், சொமாலியா ஆகிய நாடுகளில் இத்தண்டனை வழங்கப்படுகிறது.

விலங்குகளுக்கு இரையாக்குவது

கூண்டில் அடைக்கப்பட்ட வனவிலங்குகளுக்கு குறிப்பாக சிங்கத்திற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களை இரையாக்குவதும் ஒரு பழங்கால மரண தண்டனை முறையாகும். கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து ரோமானியர்களால் நிறைவேற்றப்படுகிற இம்முறை, விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் நடத்தப்பட்டது. மிகவும் கொடூரமாகக் குற்றம் செய்தவர்களையும் கிறிஸ்தவர்களையும் ரோமானியர்கள் சிங்கத்திடம் தூக்கியெறிந்திருக்கின்றனர்.

சிங்கத்தைத் தவிர கரடி, சிறுத்தை, கறுஞ்சிறுத்தை, யானை மற்றும் காளைகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் மரண தண்டனை கொடுத்துக் கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எகிப்து மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் சிங்கத்திற்கும், முதலைக்கும் உயிருடன் மனிதர்களை நரபலி கொடுக்கும் வழக்கம் கி.மு.4ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது. மேலும் மன்னனை கைவிடும் படைத்தளபதிகளுக்கும் மன்னனுக்கு துரோகமிழைக்கும் வீரர்களுக்கும் ஆயுதமற்று சிங்கத்தின் முன்பு தூக்கியெறியப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அலெக்ஸாண்டரின் போர்முறையில் மன்னனை விமர்சித்த காரணத்திற்காக லைசிமாகஸ் என்றொருவன் சிங்கத்தின் முன் தூக்கியெறியப் பட்டிருக்கிறான். ஆனால் வெறும் கையுடன் சிங்கத்தை வென்றதால் அவன் அலெக்ஸாண்டரின் முக்கிய படைத்தளபதியானதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது.

கி.மு.6ம் நூற்றாண்டில் டானியல் என்ற தீர்க்கதரிசி சிங்கத்தின் முன் தூக்கியெறியப்பட்டதாக பைபிள் கதைகளில் குறிப்பு இருக்கிறது.

ரோமானியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைகளைக் கட்டியும் நிர்கதியாக சிங்கத்தின் முன்பு கூண்டினுள் நிறுத்தி மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கின்றனர். அழகற்றவனாக இருந்த காரணத்தனால் ஒருவனை சிங்கத்திற்கு படையலாக்கியிருக்கின்றனர். இறைச்சியின் விலை அதிகமான போது சாதாரண குற்றம் புரிந்தவர்களையும் சிங்கங்களுக்கு இரையாக்கியிருக்கின்றனர்.

ரோம் நகருக்கு சிங்கம் ஆப்ரிக்காவிலிருந்தும், கரடிகள் ஜெர்மனியிலிருந்தும் இறக்குமதி செய்திருக்கின்றனர்.

கொலை, கொள்ளை, திருட்டு, பலாத்காரம், துரோகம், சூழ்ச்சி, மன்னனை எதிர்த்தல் ஆகிய குற்றங்களுக்கு இணையாக கிறிஸ்தவர்களுக்கும் ரோமானியர்கள் விலங்குகளுக்கு இரையாக்கும் தண்டனையைக் கொடுத்திருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் இரவில் ரகசியமாகக் கூடி ஜெபம் செய்வது, பாடல் பாடுவது கலவரம் செய்வதற்கு நிகராகக் கருதப்பட்டது. அவர்கள் ரோமானியர்களின் கடவுளை வணங்காது, மந்திர தந்திரங்கள் புரிந்து கொண்டும், மன்னனின் சின்னங்களுக்கு மதிப்பு அளிக்காது சட்டத்திற்குப் புறம்பான மதம் ஒன்றைப் பின்பற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டனர். பூகம்பம், பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கை அழிவுகளுக்கும் அவர்களின் மத நடவடிக்கையே காரணமென்று சிங்கங்களுக்கு முன்பு தூக்கி எறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சில சமயங்களில் உடல் துண்டாக்கப்பட்டோ, கழுத்து முறிக்கப்பட்டோ, சிலுவையில் அறைந்து தொங்கவிடப்பட்டோ கொலை செய்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களை ரோமானியர்கள் வன விலங்குகளுக்கு இரையாக்கியிருக்கின்றனர்.

கி.பி. 681ல் இந்த தண்டனை முறை ரோமானியர்களால் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

லிங்க் சீ

லிங்க் சீ என்றால் சீன மொழியில் மெதுவாக வெட்டுதல் என்று பொருள். சீனாவில் நிறைவேற்றப்படும் இந்த மரண தண்டனை முறைப்படி குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் ஒரு கத்தியால் ஆயிரம் முறை வெட்டப்பட்டு ஒவ்வொரு பாகமாக வெட்டி எடுக்கப்படும். சில நாட்கள் வரை நடைபெறும் இந்தத் தண்டனை நிறைவேற்றல் கி.பி 900 தொடங்கி 1905 வரை முறை சீனாவில் வழக்கத்தில் இருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் பொது இடத்தில் ஒரு கட்டையில் இறுக்கக் கட்டப்பட்டு அவரது உடல் கீற்று கீற்றாக வெட்டப்படும். இந்த தண்டனையின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் பொது இடத்தில் அவமானப் படுத்தப்படுகிறார். அவர் மிகவும் மெதுவாக, படிப்படியாக வதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அவர் இறந்த பிறகும் அவரது உடல் தொடர்ந்து வெட்டப்படும்.

ராஜ துரோகம், ஒரு கூட்டத்தைக் கொலை செய்தல், பெற்றோர்களைக் கொலை செய்தல், முதலாளியைக் கொலை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. சில சீனப் பேரரசர்கள் மக்களைப் பயமுறுத்துவதற்காக சிறிய குற்றம் புரிந்தவர்களையும், குற்றம் புரியாதவர்களையும் பொய்சாட்சிகளின் உதவிகொண்டு லிங்க் சீ முறையில் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். போர் கைதிகளுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தார் செல்வாக்கு உடையவர்களாக இருந்தால் அவருக்கு ஓபியம் எனும் போதை மருந்து கொடுப்பதற்கு ஆவண செய்யப்படும்.அதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மறந்து வலியை உணராமல் இருக்கமுடியும். அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் இதயத்தில் கத்தியைப் பாய்ச்சப்பட்டு அவர் தொடக்கத்திலேயே கொலை செய்யப்படுவார்.

இந்த முறைப்படி முதலில் மிகவும் கூர்மையான கத்தியைக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரின் கண்கள் நோண்டி எடுக்கப்படுகின்றன. அதன் மூலம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் குற்றம் சாட்டப்பட்டவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்.


அதற்குப்பிறகு சிறிய சிறிய வெட்டுக்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் காதுகள், மூக்கு, நாக்கு, கை விரல்கள், கால் விரல்கள், முலைகள், பிறப்பு உறுப்புகள் படிப்படியாக வெட்டி எடுக்கப்படுகின்றன. அதன் பிறகு கைகள், தொடை, புட்டம் ஆகிய பகுதிகள் வெட்டப்படுகின்றன. மூன்று நாட்கள் நடக்கும் இந்த தண்டனை நிறைவேற்றல் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரின் உடல் 3600 முறை கத்தியால் வெட்டப்படுகிறது. இறுதியாக துருவி எடுக்கப்பட்ட உடல் பொது இடத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. சில சமயம் அந்த உடலின் பாகங்கள் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இவற்றைத் தவிர பல மரண தண்டனை முறைகள் உலகம் முழுக்கப் பயன்பாட்டில் இருந்தன என்பதும் மரண தண்டனையை எல்லா அரசுகளும் மக்களை நெருக்கடியில் வைத்திருக்கவே அவை நிறைவேற்றின என்பதும்
நாம் யாவரும் அறிந்ததே.

தற்போது பயன்பாட்டில் இருக்கிற தண்டனை முறைகள் சில பழைய முறைகளைப் போல கொடூரமானதாக இல்லாவிட்டாலும் அவை மிகவும் நுட்பமானதாக, துல்லியமானதாக, வலி குறைந்ததாக இருப்பதாகக் கருதப்படுபவை. ஆனாலும் மரணம் நிச்சயம்.

தலையைத் துண்டாக்குதல்:

கத்தி, கோடாறி, கம்பி, அரிவாள், வாள், கில்லட்டின் இவற்றில் ஏதாவது ஒன்று பயன்படுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவரின் தலையைத் துண்டாக்குவதும் மிகப் பழைய மரண தண்டனை முறைகளில் ஒன்றாகும். துண்டாக்கப்பட்ட தலையை எல்லோர் பார்வைக்கு வைப்பதும் அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கவோ, தண்டனையை நிறைவேற்றியவர்கள் தங்களது பெருமையை பறை சாற்றவோ செய்வதும் உலகம் முழுக்க காணக்கிடைக்கிற வழக்கமாகும்.

தலை துண்டானதும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்தம் மூளைக்கு வருவது நின்று போகும். அதனால் தலை துண்டான சில நிமிடங்களில் மூளையின் மரணம் நிகழ்ந்துவிடும். துண்டாக்கப்பட்ட தலையைத் திரும்ப உடலுடன் இணைத்து உயிரூட்டும் சாத்தியம் விலங்குகளுக்குப் பரிசோதனை முறையில் நடந்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தலையைத் துண்டாக்கும் தண்டனை முறை வழக்கத்தில் இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் வாளால் தலை துண்டாக்கப்பட்டு இறப்பது என்பது வீர மரணமாகவும் கருதப்பட்டது. மேட்டுக்குடி மக்களுக்கே இத்தண்டனை வழங்கப்பட்டது.

தலையைத் துண்டாக்கும் வாளோ, கோடாறியோ மிகக்கூர்மையாக இருந்தால், தலை மிகத்துல்லியமாக வெட்டப்பட்டால் தலை மிகத்துரிதமாக துண்டாகும் என்பதோடு ஒப்பீட்டளவில் வலியே இல்லாத மரண தண்டனை இது என்றும் கருதப்படுகிறது. துல்லியமாக வெட்டச்சொல்லி தலையை வெட்டுபவருக்கு குற்றம் சாட்டப்பட்டவர் லஞ்சமாக தங்க நாணயம் கொடுத்த சம்பவங்களும் ஐரோப்பாவில் நடந்திருக்கின்றன. சரியான வெட்டும் நபர் இல்லாமல் போனாலோ அல்லது வெட்டுபவருக்கு போதுமான உற்சாகம் இல்லாமல் போனாலோ அல்லது கருவி கூர்மையாக இல்லாது போனாலோ பலருக்கு பல வெட்டுகள் நிகழ்ந்தும் தலை துண்டாகாமல் துடித்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

ஒரே வெட்டில் தலை துண்டாகவேண்டும் என்பதற்காக எடை அதிகமான இரண்டு கைகளால் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாள் அல்லது கோடாறி தான் இத்தண்டனை முறையை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, கொரியா, ஸ்பெயின், மெக்ஸிகொ, செளதி அரேபியா போன்ற நாடுகளிலும் மரண தண்டனை தலையைத் துண்டாக்கும் முறையைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டது.

அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்தவர்க்கும் ஒரே மாதிரியான வலி இல்லாத, மாண்புமிக்க, சுருக்கமான மரண தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று பிரெஞ்சு புரட்சிக்கு சற்று முன்பு பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி கில்லட்டின் என்ற தானியங்கி தலைவெட்டும் கருவியை பிரான்ஸில் அறிமுகப் படுத்தினார். புரட்சிக்குப் பின்பு அவரையும் அவரது மனைவி மேரி அன்டோனியட்டையும் சேர்த்து கில்லட்டின் தான் வெட்டியது. 1981ம் ஆண்டு மரண தண்டனை பிரான்ஸில் முற்றிலும் ஒழிக்கப்படும்வரை கில்லட்டின் தான் பெரும்பாலான மரண தண்டனைகளை நிறைவேற்றப் பயன்படுத்தப்பட்டது.

பிரான்ஸில் பிரெஞ்சுப்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் 40,000 பேர் கில்லட்டினைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்கள். அது ஒரு கேளிக்கை நிகழ்ச்சியாக, முன்னறிவுப்பு செய்து, குழந்தைகளுடன் பெற்றோர்கள் தலை துண்டாக்கபடுவதை கூட்டம் கூட்டமாகப் பார்க்க வந்திருக்கின்றனர். ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் இரண்டாம் உலகப்போரின் போது 16,000ம் பேருக்கு நாஜி படையினரால் கில்லட்டினைப் பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மின்சார நாற்காலி

அமெரிக்காவில் மட்டுமே நிறைவேற்றப்படும் இத்தண்டனை முறையின் படி குற்றம் சாட்டப்பட்டவரை இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு மர நாற்காலியில் உட்கார வைத்து அவரது உடல் மீது மின்கம்பிகளைப் பொருத்துகின்றனர். பல கட்டங்களில் 2000 வோல்ட்டுக்கும் அதிகமான மின்சாரம் அவர் மீது செலுத்தப்படுகிறது. முதலில் கொடுக்கப்படும் மின் தாக்குதலில் அவர் தனது சுயநினைவை இழந்து அவருக்கு மூளையின் மரணம் நிகழ்கிறது. இரண்டாவது மின் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவரின் முக்கிய உறுப்புகள் சேதமடைகின்றன. அதிக மின்சாரம் பாய்வதினால் அவரது இதயம் அளவுக்கு அதிகமாகத் துடிக்க ஆரம்பித்து மரணம் நிகழ்கிறது.

1887ல் அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் தூக்கு தண்டனைக்கு மாற்றாக புதிய, மனிதத் தன்மையுள்ள ஒரு மரண தண்டனை முறை வேண்டும் என்கிற நோக்கில் மின்சார நாற்காலி முறை அறிமுகப் படுத்தப்பட்டது. 1890ம் ஆண்டு வில்லியம் கெம்லர் என்பவருக்கு முதன் முறையாக மின்சார நாற்காலியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏறக்குறைய 8 நிமிடங்கள் எடுத்துக்கொண்ட இத்தண்டனையின் போது கெம்லரின் ரத்த நாளங்கள் வெடித்து மின்கம்பி கட்டப்பட்ட இடங்களில் ரத்தம் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

1903ம் ஆண்டு வார்மர் என்பவருக்கு மின்சாரத்தைப் பாய்ச்சி மரண தண்டனை கொடுக்கப்பட்டும் அவர் இறக்கவில்லை. பிணவறைக்கு கொண்டு சென்ற பின்பும் அவர் மூச்சு விட்டார். மறுபடியும் மின்சாரம் பாய்ச்சு இரண்டாவது முறையாகத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1928ம் ஆண்டு கென்டகி சிறையொன்றில் ஒரே நாளில் 7 நபர்களுக்கு மின்சார நாற்காலி முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மின்சாரம் பாய்ச்சப்படுவதால் பல முறை குற்றம் சாட்டப்பட்டவரின் தலை தீ பிடித்து எரிந்திருக்கிறது. பலருக்கு மீண்டும் மீண்டும் மின்சாரம் பாய்ச்சவேண்டியிருக்கிறது. தூக்கு தண்டனையை விட கொடூரமானதாக இருப்பதாகக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. இத்தகைய குளறுபடிகளால் மின்சாரம் பாய்ச்சி தண்டனை கொடுக்கும் முறைக்கு எதிர்ப்புகள் கிளம்பி இப்பொது அமெரிக்காவில் 6 மாநிலங்களைத் தவிர உலகில் வேறெங்கும் இத்தண்டனை முறை பழக்கத்தில் இல்லை.

விச ஊசி முறை

குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு உயிரைக்கொல்லக்கூடிய விச மருந்தை ஊசி மூலமாக செலுத்துவதன் மூலம் மரண தண்டனை மிகக் குறைவான நேரத்தில் நிறைவேற்றப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பிற மரண தண்டனை முறைகளான தூக்கு தண்டனை, துப்பாக்கியால் சுடுதல், தலையை வெட்டுதல், மின்சாரத்தப் பாய்ச்சுதல் போன்ற வலி நிறைந்த தண்டனைகளுக்குப் பதிலாக விச ஊசி போட்டு ஒருவரைக் கொல்லும் முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. 1982ல் முதன்முதலாக டெக்சாஸ் மாநிலத்தில் சார்லஸ் ப்ரூக்ஸ் என்பவருக்கு விச ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனா, கொதமாலா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இம்முறைப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜெர்மனியில் வாழத்தகுதியற்றவர்கள் என்று குற்றம் செய்யதவர்களையும் ஹிட்லரின் அரசாங்கம் ஆயிரக்கணக்கில் விச ஊசி போட்டு கொன்றது.

இம்முறைப்படி மூன்று கட்டங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு பார்பிடூரேட் என்கிற மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக பான்குரோனியம் புரொமைட் கொடுக்கப்பட்டு உடலிலுள்ள அனைத்து தசைகளையும் செயலற்றுப் போகச்செய்கிறது. அதுவே ரத்தவோட்டத்தை நிறுத்தி மரணத்தை விளைவிக்கிறது. மூன்றாவதாக பொட்டசியம் குளோரைட் செலுத்தப்பட்டு இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படுகிறது.

ரத்த நாளங்கள் மூலமாக, படிப்படியாகக் விசம் ஏற்றப்பட்டு மரணம் மிகச் சில நிமிடங்களில் நிகழ்கிறது. மயக்கமருந்து கொடுக்கப்படுவதற்கான காரணம் ஏற்றப்படும் விசம் கடும் வலியையும் வேதனையும் கொடுக்கும் என்பதாலும், மயக்க நிலையில் தண்டனை பெறுபவர் அதை உணரமாட்டார் என்றும் கூறப்படுகிறது. விச ஊசி போட்டு மரண தண்டனை கொடுக்கும் முறையை எதிர்ப்பவர்கள் செலுத்தப்படும் விசம் மயக்கமருந்தை செயலிழக்கச் செய்துவிடும் என்றும் வலியை தண்டனை பெறுபவர் உணர்ந்தாலும் தசைகள் செயலிழப்பதால் அதை அவரால் வெளிப்படுத்தமுடியாது என்றும் கூறுகின்றனர்.

இத்தண்டனையை நிறைவேற்றுவதில் அமெரிக்காவில் மருத்துவர்கள் யாரும் பங்கு கொள்வதில்லை. அதனால் சரியாக மயக்க மருந்து செலுத்தப்படுவதில் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது. அது தண்டனை பெறுவோரின் வேதனையைக் குறைக்காது என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். விச ஊசி போட்டு நிறைவேற்றப்படும் தண்டனை முறை வலி குறைந்ததாகத் தோற்றமளிக்கிறதே தவிர உண்மையில் எந்த ஒரு கொலையும் வேதனை தரக்கூடியது தான்.

விசவாயுக்கூடம்

மூடப்பட்ட ஒரு அறையில் குற்றம் சாட்டப்பட்டவர் அடைக்கப்பட்டு ஹைட்ரஜன் சயனைட் அல்லது கார்பன் டை ஆக்சைட் மற்றும் கார்பன் மோனாக்சைட் போன்ற விசத்தன்மை கொண்ட வாயுக்கள் அந்த அறைக்குள் திறந்துவிடப்படுகின்றன. அதன் மூலம் சில நிமிடங்களில் விசம் ரத்தத்தில் கலந்து அல்லது மூச்சுத் திணறி குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து போகிறார்.

1920களில் அமெரிக்காவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இத்தண்டனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஹிட்லரின் காலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் விசவாயுக்கூடத்தில் தள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

துப்பாக்கியால் சுடுதல்

துப்பாக்கிகள் ஏந்திய ஒரு காவல் படையினர் அல்லது ஒரு காவலர் குற்றம் சாட்டப்பட்டவரை சுட்டுக்க்கொல்லும் தண்டனை முறை உலகில் 70 நாடுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உலகில் அதிக இடங்களில் நிறைவேற்றப்பட்ட தண்டனையும் இது தான். மற்ற தண்டனைகளைக் காட்டிலும் கொளரவமான தண்டனையாகக் குறிப்பாக ராணுவ வீரர்கள் வீரர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

மிகப் பழைய ஆனால் இப்பொதும் வழக்கில் இருக்கிற தண்டனை முறை. காவலர்கள் அல்லது ராணுவ வீரர்கள் இத்தண்டனை நிறைவேற்றலில் பயன்படுத்தப்படுகின்றனர். பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவரின் கண்கள் கட்டப்பட்டு ஒரே நேரத்தில் 5க்கும் மேற்பட்டவர் கொண்ட குழு துப்பாக்கிகளால் சுட்டு தண்டனையை நிறைவேற்றும். தனி நபர் சுடுவதாய் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவரின் பின் மண்டையில் சுடப்படும்.

ராணுவ வட்டாரத்தில் துரோகம், கோழைத்தனம் மற்றும் கலகம் ஆகிய குற்றங்களுக்காக துப்பாக்கியால் உடன் பணிபுரிந்த படையினரே சுட்டுக்கொல்லும் தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

1914-18ல் நடந்த பின்லாந்து போர் மற்றும் போருக்குப் பிறகு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போதும் பின்லாந்தில் 500க்கும் மேற்பட்டவர்க்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தோனேசியாவில் பாலி குண்டுவெடிப்புக் குற்றத்திற்காக 2008ல் மூவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல், அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, மெக்சிகோ, நார்வே, இங்கிலாந்து, ஐக்கிய அரப் எமிரேட் ஆகிய நாடுகளில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை ஆயிரக்கணக்கானோருக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

20ம் நூற்றாண்டில் சோவியத் யூனியனில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றும் முறை பிற நாடுகளைக் காட்டிலும் அதிகம் வழக்கத்தில் இருந்தது. ஒரு காவலர் ஒரு துப்பாக்கியைக் கொண்டு தண்டனை நிறைவேற்றும் முறையும் இங்கு தான் நடைமுறையில் அதிகம் இருந்தது.

அமெரிக்காவில் 1608ல் ஜார்ஜ் கென்டால் என்பவர் ஸ்பெயின் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக துப்பாக்கி ஏந்திய குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ரோனி லி காட்னர் என்பவர் கொலைக் குற்றத்திற்காக 10, ஜூன் 2010ல் துப்பாக்கி ஏந்திய குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இருவருக்கிடையில் நூற்றுக்கணக்கானோருக்கு இத்தண்டனை கொடுக்கப்பட்டது.

சீனாவில் பின்னந்தலையில் சுட்டுக்கொல்லும் முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவில் மொகலாயர் காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை பீரங்கியில் கட்டி, உடலை தூள் தூளாக்கச் செய்யும் தண்டனை முறை நிறைவேற்றப்பட்டது. வெள்ளைக்காரர்கள் காலத்திலும் குறிப்பாக சிப்பாய் கலகத்தின் போது இத்தண்டனை முறை நிறைவேற்றப்பட்டது.

இந்தோனிசியா, தைவான், மங்கோலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இம்முறை வழக்கத்தில் இருக்கிறது.

தூக்கில் போடுதல்

தூக்கில் போடுதல் மிகப் பழைய தண்டனைகளில் ஒன்றாகும். ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையாகும்.

உயரம் குறைவான தூக்கு, உயரம் அதிகமான தூக்கு என்று பிரதானமாக இரண்டு வகையாகத் தூக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உயரம் அதிகமான தூக்கு முறையில் கழுத்தில் கயிற்றை மாட்டி, தூக்கு மேடையில் குற்றம் சாட்டப்பட்டவர் நிறுத்தப்பட்டதும் காலுக்குக் கீழிருக்கும் பலகை விலக்கப்படுகிறது. கால்கள் அந்தரத்தில் தொங்குகின்றன. உடலின் மொத்த எடையும் கயிற்றிலும் கழுத்திலும் அழுத்தப்படுவதால் கழுத்து நெறிக்கப்பட்டு தண்டுவடம் நொறுங்குவதால், ரத்த அழுத்தம் வேகமாக குறைவதால் தூக்கு மாட்டப்பட்டவர் மயக்க நிலை அடைகிறார். கண்கள் பிதுங்கி மண்டை ஓட்டிலிருந்து வெளித்தள்ளப்படுகின்றன. நாக்கும் வாய்க்கு வெளியே தள்ளப்படுகிறது. கழுத்தில் பெரிய வெட்டும் காயமும் பள்ளமும் உருவாகிறது. மலம் அல்லது சிறுநீர் கழிக்கிறார். மூளைக்கு செல்லும் மூச்சுக்காற்று தடைபட்டு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மூளையின் மரணம் நிகழ்கிறது. மற்றும் 8 முதல் 12 நிமிடங்களுக்குள் தூக்கில் தொங்கவிடப்படுபவர் இறந்து போவார்.

உயரம் குறைவான தூக்கு எனும் முறையில் தண்டிக்கப்படுகிறவர் ஒரு முக்காலி மீதோ அல்லது ஒரு நாற்காலி மீது நிறுத்திவைக்கப்பட்டு தூக்கு கழுத்தில் மாட்டப்பட்டதும் முக்காலி தள்ளிவிடப்படுகிறது. இந்த முறையில் தண்டிக்கப்படுகிறவர் அதிக வேதனையை அனுபவிப்பார். மரணம் நிகழ 20 நிமிடங்களாகும். அதனால் இத்தண்டனை முறை பொது இடத்தில் மக்கள் முன்பு நிறைவேற்றப்பட்டது.

2010ம் ஆண்டு 237 பேர்களுக்கு பங்களாதேசம், எகிப்து, ஈரான், ஈராக், சூடான், ஜப்பான் ஆகிய நாடுகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் 5 பெண்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது ஈரான் நாடு இருக்கிற பாரசீகத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சிறப்பான கருவிகளோ, கொலை செய்ய வல்லுநனரோ தேவைப்படாத மிகவும் சுலபமாக, எல்லோரும் பார்க்கக்கூடிய அளவில் உயரமான மேடையில் நடத்தப்பட்ட, ரத்தம் சிந்தப்படாத தண்டனை முறையாக இருந்ததால் எல்லாக்காலங்களிலும் எல்லாத் நாடுகளிலும் அதிகம் நிறைவேற்றப்பட்ட தண்டனை முறையாகும். இதுவரை 5 லட்சம் பேர் தூக்கில் இடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டனின் காலனி நாடுகள், ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் தூக்கு தண்டனையே அதிகம் நிறைவேற்றப்பட்டது.

ஹிட்லரின் ஜெர்மனியிலும், சதாம் ஹுசேனின் ஈராக்கிலும் ஆயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர். இறுதியாக 2010ம் ஆண்டு சதாம் ஹுசேனும் அமெரிக்கப் படைகளால் தூக்கிலடப்பட்டார்.

இவற்றைத் தவிர யானையை வைத்து தலையை நசுக்கிக்கொல்லுதல், குடலை உறுவிக்கொல்லுதல், தோலை உறித்தல், கழுத்தை நெறித்தல், கழுவேற்றுதல், மண்ணுக்குள் உயிரோடு புதைத்தல், விசம் கொடுத்துக்கொல்லுதல், பட்டினி போட்டுக்கொலை செய்தல், மலையில் இருந்து தள்ளிவிடுதல், கல்லைக் கட்டி கடலில் போடுதல், கழுத்தில் டயர் கட்டி நெருப்பு வைத்தல் என்று இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் இனக்குழுக்களாக இருந்த போதும், மன்னராட்சியின் போதும், குடியாட்சியின் போதும் மனித இனம் நீதியை நிலை நாட்ட வேண்டி மரண தண்டனை என்ற பெயரில் பல கொடி சக மனிதர்களைக் கொன்று குவித்திருக்கிறது.

இந்தியாவில் மரண தண்டனை

தண்டனை பற்றிய பயமும் தவறு செய்தால் உயிர் பறி போகும் என்ற நடுக்கமுமே மனிதர்களை குற்றம் புரிவதிலிருந்து தடுக்கும் என்கிறது மனு தர்மம்.

குற்றம் புரியாதவனுக்கு மரண தண்டனை கொடுப்பது எத்தகைய பாவச்செயலோ அது போல் குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை கொடுக்காமல் இருப்பதும் பாவச்செயலே என்கிறது கீதை.

இந்தியக் கடவுள்களில் பல தீய சக்திகளை தீர்த்துக் கட்டுவதில் பெரும் முனைப்பு காட்டுவதை நம் கதைகளில், இதிகாசங்களில், புராணங்களில் காணலாம். அழித்தல் என்பதே தொழிலாக ஒரு கடவுள் இருப்பதையும் குற்றம் புரிந்தவர்கள் கடவுளின் அவதாரத்தினால் கொலை செய்யப்பட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும் என்கிற கதைகளை ராமாயணம், மகாபாரத்தில் வழியே நாம் காணலாம்.

பொளத்தம், சமணம், சூஃபிக்கள் மற்றும் வள்ளலார் போன்ற சிந்தனைகள் சமாதானம், அமைதி, மன்னிப்பு என பேசினாலும் வன்முறையான தீர்வே குற்றம் மட்டும் தண்டனை பற்றிய இந்திய அரசுகளின் பார்வையின் பின்புலமாக இருந்திருக்கிறது. மொகலாயர்களுக்கு முன்பு ஆண்ட சைவ, வைணவ மற்றும் பிற இந்திய மதங்களின் சார்பு கொண்ட பேரரசர்களும், சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும், திருட்டு, கொள்ளை, பாலியல் விதிமீறல்கள், பலாத்காரம், கடத்தல், துரோகம், குடி, பிராமணனை வதைத்தல் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றி யிருக்கின்றனர். மொகலாயர்களும் ராஜ துரோகம், புரட்சி, மன்னரை அல்லது ஆட்சியை எதிர்ப்பது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை முறைகளை நிறைவேற்றி வன்முறை பாரமபரியத்தைத் தொடர்ந்தனர்.

தலையைத் துண்டாக வெட்டுதல், கழுவிலேற்றுதல், யானைக்கொண்டு மிதித்தல், கடலில் கல்லைக்கட்டித் தூக்கிப் போடுதல், தூக்கில் போடுதல், துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லுதல், பீரங்கியில் கட்டி உடலைச் சிதறச்செய்தல், தோலை உறித்தல், கழுத்தை நெறித்தல், காதில் ஈயைத்தைக் காய்ச்சி ஊற்றுதல், பட்டினி போடுதல், விசம் கொடுத்தல் போன்ற மரண தண்டனை முறைகள் பல மன்னர்களாலும் பல தேசங்களிலும் நாட்டின் எதிரிகள் மீதும், துரோகம், கொலை, பலாத்காரம், கொள்ளை, புரட்சி செய்தல், மாற்றுக்கருத்து, மன்னருக்கு அடிபணிய மறுப்பு, வரி கொடுக்க மறுப்பு போன்ற குற்றங்களுக்கு நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

பிரிட்டானிய காலனிய ஆட்சிக்கு முன்பு பார்ப்பனர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கும், பிரிட்டானியர் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாக் காலங்களிலும் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கானோர் பிரிட்டானிய காலனிய ஆட்சியில் இந்திய விடுதலைக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆயுதமேந்தியோ அமைதியான முறையிலோ போராடியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டோ, தூக்கில் போடப்பட்டோ மரண தண்டனைக்குப் பலியாகியிருக்கின்றனர்.

பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, குதிராம் போஸ், அகமதுல்லா, யாஹியா அலி, அமீர் சந்த் மாஸ்டர், ஆரூர் சிங், ராம் பிரசாத் பிஸ்மில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், என்று ஆயிரக்கணக்கானோர் வெள்ளையரினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டனர்.

விடுதலைக்கு பின்பு

காலனிய பிரிட்டானிய அரசு பயன்படுத்திய பெரும்பாலான சட்டங்களே விடுதலைக்குப் பின்பு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டன. குறிப்பாக இந்தியக் குற்றவியல் சட்டம் 1860 மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1898 ஆகியனவற்றின் கீழ் மரண தண்டனை என்பது வழக்கமாகவும் ஆயுள் தண்டனை என்பது விலக்காகவும் கருதப்பட்டன. இந்தச் சட்டங்களின் படி ஏன் மரண தண்டனை ஒரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுக்கவில்லை என்று நீதிபதி விளக்கம் தரவேண்டும். கொலை செய்தாலே தூக்கு என்பதே சுதந்தர இந்தியாவில் நிலவியது.

1975ல் புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு மரண தண்டனை என்பது ஒரு விலக்காகவும் ஒரு நீதிபதி மரண தண்டனை கொடுத்தால் ஏன் கொடுக்கிறார் என்பதற்கு அவர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற சூழல் உருவானது. 1980ல் பச்சன் சிங் வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பில் மரண தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்கில் தான் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கிருச்ணய்யர், பகவதி ஆகிய நீதிபதிகள் கொண்ட 4 நீதிபதிகள் பென்ச் வலியுறுத்தியது.

அதன்படி உச்சநீதிமன்றம் தான் செயல்படுகிறதே ஒழிய மாவட்ட நீதிமன்றங்களிலும் மாநில உயர்நீதிமன்றங்களிலும் தூக்கு தண்டனைகள் எந்தக்குறைவும் இல்லாமல் அள்ளி வழங்கப்படுகின்றன.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு இதுவரை 4000க்கும் மேற்பட்டவர்களைத் தூக்கில் போட்டு கொலை செய்திருக்கிறது என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் அரசியல் காரணங்களுக்காகவே கொலை செய்யப் பட்டிருக்கின்றனர்.

2010ம் ஆண்டு 105 பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

20க்கும் மேற்பட்டவர்களின் கருணை மனுக்கள் இந்திய ஜனாதிபதியிடம் காத்திருக்கின்றன. ராஜீவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் கருணை மனு நிராகரிக்கப்ப்ட்டுள்ளது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 1860ன் படி இந்தியாவில் பின்வரும் 9 குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்படலாம்.

1) தேச துரோகம் -இந்திய அரசாங்கத்திற்கெதிரான போர் புரிந்தால்
2) ஆயதமேந்தி நடத்தப்பட்ட கலகத்திற்கு புரட்சிக்கு ஆதரவு
3) அப்பாவி ஒருவருக்கு மரண தண்டனை கிடைக்கக் காரணமான பொய் சாட்சி கூறுதல்
4) ஒருவரை மிரட்டி, தூண்டி பொய் சாட்சி கூறவைத்து அதன் மூலம் ஒரு அப்பாவிக்கு மரண தண்டனை கிடைத்தால்
5) கொலை
6) வயதுக்கு வராதவர் அல்லது போதையில் இருப்பவர் அல்லது மனநோயாளி இவர்களில் யாரையாவது தற்கொலை செய்யத் தூண்டினால்
7) ஆயுள் தண்டனை கைதி ஒருவர் கொலை செய்ய முயன்றால்
8) பிணைக்கு யாரையாவது கடத்தினால்
9) கொலையுடன் கூடிய கொள்ளை

இவற்றைத்தவிர 12 சிறப்புச்சட்டங்களின் கீழ் இந்தியப் பாதுகாப்பு, ஆயுதப் பரவலாக்கல் தடுப்பு, சாதிய வன்முறை தடுப்பு, உடன்கட்டை ஏறுதல் தடுப்பு, தீவிர வாதச்செயல் தடுப்பு என்று பல காரணங்களுக்காகவும் மரண தண்டனை கொடுக்கப்படலாம். மகாராச்ட்ரா, ஆந்திரா, ஒரிசா, சத்திஸ்கர் போன்ற மாநிலங்கள் தமக்கென்று தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் கொண்டுவந்துள்ளன. அவற்றின் கீழும் மரண தண்டனை வழங்கப்படலாம்.

இன்னும் நிறையக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் பல நீதிபதிகளே சொல்லி வருகின்றனர். போலி மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல்துறையினர் நடத்தும் கொலைகளுக்கும் மரண தண்டனை தரவேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் காவல்துறையில் ஒரு புகாரைப் பதிவு செய்வதில் இருந்து, புலனாய்வு, விசாரணை, தீர்ப்பு, மேல்முறையீடு ஆகிய பல நிலைகளில் பாரபட்சமின்றி எதுவும் நடப்பதில்லை. சாதி, இனம், வர்க்கம், மொழி, அந்தஸ்து, பால், மதம் எனும் பல கூறுகள் தீர்ப்புகளைத் தீர்மானிக்கின்றன.

ஒரே வகையான குற்றத்திற்கு பல விதமான தீர்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஒரே வழக்கில் ஒரே குற்றத்திற்கு இருவரில் ஒருவருக்கு மரண தண்டனை; மற்றோருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மிகக்கொடூரமான குற்றங்களுக்கு வழக்கே பல சமயங்களில் பதிவு செய்யப்படுவதில்லை. மரண தண்டனை என்பது அரிதினும் அரிதான வழக்கில் தான் கொடுக்கப்படவேண்டும் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டாலும் எது அரிதினும் அரிதான வழக்கு என்பதை ஒரு நீதிபதியோ அல்லது நீதிபதிகள் அடங்கிய குழுவோ மட்டும் தீர்மானித்தல் என்பது நடுநிலையானதாக இருக்கமுடியாது.

அரசின் கொள்கைகள், பொது மக்கள் மத்தியில் நிலவும் மனநிலை, ஊடகங்களின் அழுத்தம், நீதிபதிகள் மற்றும் காவல்துறையினரின் சாதிய, மதவெறி, மற்றும் ஆணாதிக்க சார்புநிலை போன்றவற்றின் தாக்குதலினால் குற்றம் புரிந்தவர்களும் குற்றம் புரியாதவர்களும், வேடிக்கை பார்த்தவர்களும், உடன் பயணித்தவர்களும் இன்று தூக்குக் கயிற்றின் கீழ் தண்டனைக்குக் காத்திருக்கின்றனர். உங்களுக்கும் எனக்கும் மரண தண்டனை கிடைக்காமல் இருப்பதற்கு அதிர்ச்டம் ஒன்றே காரணம். குலுக்கல் முறையில் நமது பெயர் வராமல் இருக்கவேண்டும்.

உலகில் இப்பொது மரண தண்டனை

2010 டிசம்பரில் ஐக்கிய நாடுகளின் சபையில் மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர் நாடுகள் அத்தீர்மானத்தை வரவேற்றன.

1960களில் தொடங்கி ஐக்கிய நாடுகள் சபையின் தொடர் முயற்சியின் விளைவாக பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் கையெழுத்தாகி உலகில் 139 நாடுகளில் இன்று மரண தண்டனை நடைமுறையில் இல்லை. அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

23 நாடுகளில் தான் மரண தண்டனை 2010ல் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் 46 பேருக்கும் சீனாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கும் வட கொரியாவில் 60 பேருக்கும் செளதி அரேபியாவில் 27 பேருக்கும் கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை. ஆப்ரிக்காவில் ஒரு சில நாடுகளில் தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆசியாவில் தான் அதிக நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

மரண தண்டனைக்கு எதிரான வாதங்கள்

1) மரண தண்டனை ஆகக்கொடூரமான, மனிதத்தன்மையற்ற, மனித மாண்பை அழிக்கும் தண்டனை
2) மரண தண்டனையால் குற்றங்கள் குறைந்ததாக சான்றுகள் உலகில் எங்கும் இல்லை.
3) பாரபட்சமாக ஏழைகள், மத, இன, மொழி சிறுபான்மையினர்களுக்குத் தான் அதிகம் மரண தண்டனை வழங்கப்படுகிறது.
4) அரசியல் மாற்றுக் கருத்தை ஒடுக்குவதற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது.
5) மரண தண்டனை வழங்கப்படுவதில், நிறைவேற்றப்படுவதில் ஒரு நீதியில்லை. வரம்புகளோ, அறமோ, ஒழுங்கோ இன்றி தான்தோன்றித் தனமாக வழங்கப்படுகிறது.
6) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் திரும்பப்பெறமுடியாது. நிரபராதிகள் அநியாயமாகக் கொல்லப்படுவார்கள்.
7) மரண தண்டனை ஒரு குறுக்குவழி. சரியான தீர்வு மன்னித்தல், திருந்துதல் மற்றும் மறுவாழ்வு தான்.
8) யாருடைய உயிரை எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. அது அரசாக இருந்தாலும் சரி ஆண்டியாக இருந்தாலும் சரி.

இந்தியாவில் மரண தண்டனை வழங்குவது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இந்தியா ஐநாவின் மரண தண்டனைக்கு எதிரான எந்த தீர்மானத்தையும் ஒப்பந்தங்களையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது
.

தொடரும் நீதிக்கொலைகள்: II

பாகம் 2: சாந்தன், முருகன், பேரறிவாளன்

1) 1991 மே 21ம் நாள் சென்னை திரும்பெரும்புதூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு வெடித்து கொலை செய்யப்பட்டார்.

அப்போது நடந்து கொண்டிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்காகப் பிரச்சாரம் செய்ய ராஜீவ் காந்தி திருபெரும்புதூர் வந்திருந்தார்.

மேடைக்குப் போகும் வழியில் ராஜீவ் காந்திக்கு மாலை போட்ட தானு என்ற பெண் தனது இடுப்பில் கட்டப்பட்ட RDX வெடிகுண்டை வெடிக்கச்செய்து தானும் இறந்தாள்.

ராஜீவ் காந்தியை வேடிக்கை பார்க்க வந்தவர்கள், காவலர்கள், கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட 14 பேர் இறந்து போனார்கள்.

ராஜீவ் மக்களோடு மிகவும் நெருக்கமாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்றும் தனக்கு ஆபத்து என்றாலும் தான் வேறு என்ன செய்ய முடியும் என்று சொன்னார் என்றும் ராஜீவ் காந்தியுடன், காரில் பிரச்சாரத்தின் போது, திருபெரும்புதூருக்குப் பயணித்த, பார்பரா க்ரோசே எனும் அமெரிக்க நீயூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் கூறுகிறார்.

பின்னாட்களில் ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு பற்றி, விசாரணை செய்த நீதிபதி வர்மா, உள்ளூர் காங்கிரஸ் காரர்கள் தான் ராஜீவ் காந்திக்கு, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குலைத்தனர், என்று குற்றம் சாட்டினார்.

அப்போது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. தமிழக கவர்னர் பீஸ்ம நாராயணன் சிங், ராஜீவ் காந்தியை பிரச்சாரத்திற்கு வரவேண்டாம், அவர் உயிருக்கு ஆபத்து என்று அறிவுறுத்தியாகவும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதன் பேரிலேயே, ராஜீவ் தமிழ்நாட்டிற்குப் பிரச்சாரம் செய்ய வந்ததாகவும், மூத்த பத்திரிக்கையாளர் ராம் பகதூர் ராய் கூறுகிறார்.

மேலும் ராஜீவ் கொலை பற்றி விசாரித்த ஜெயின் கமிசன் அரசியல் தரகர் சந்திரசாமிக்கும், அமெரிக்க உளவுத் துறைக்கும் மற்றும் 21 பேருக்கும் இந்தக் கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்றும் கூறுகிறது.

அந்நாளைய இந்திய பிரதமர் சந்திர சேகர் ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான CBIயிடம் ஒப்படைத்தார். CBI கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு SIT (SPECIAL INVESTIGATIVE TEAM) ஒன்றை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெறும் வெற்றி பெற்று நரசிம்ம ராவ் பிரதமரானார். மரகதம் சந்திரசேகரும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருபெரும்புதூரில் ராஜீவ் காந்திக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் பின்னாட்களில் உருவாக்கப்பட்டன. தொழிற்வளர்ச்சிக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.

வைணவக் குருக்களில் ஒருவரான ராமானுஜர் பிறந்த இடமான திருபெரும்புதூரில் 2000க்குப்பிறகு தமிழ்நாட்டில் வேறு எந்த சிறுநகரத்திலும் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு குவிகிறது. ஒரு புதிய விமான நிலையம் உருவாக்கப்படவுள்ளது.

ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நினைவூட்டு வதற்கும் தமிழர் மனதில் குற்ற உணர்வை தொடர்ந்து நீடித்திருக்கச் செய்வதற்கும் திருபெரும்புதூர் மிக அவசியமானதால் அந்நகரம் தொடர்ந்து சிறப்பான கவனத்திற்கு உள்ளாகிறது.


2) SITயின் விசாரணை

முன்னாள் CBIயின் தலைவரான கார்த்திகேயன் தலைமையில் SIT என்கிற சிறப்பு புலனாய்வுக்குழு சென்னையில் மல்லிகை என்ற அரசு கட்டடத்தில் தனது புலனாய்வைத் தொடங்கியது.

சிறப்பு புலனாய்வுக்குழுவில் அதன் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி, 4 DIGக்கள், 8 SPக்கள், 14 DSPக்கள், 44 இன்ஸ்பெக்டர்கள் உட்பட்ட 71 போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.

விடுதலைப் புலிகள் தான் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர் என்கிற முன் முடிவு எடுக்கப்பட்ட வாதத்தில் இருந்து தான் புலனாய்வு தொடங்கியது.

ராஜீவ் கொலைக்கு முன்பு புலிகளுக்கும் மற்ற ஈழத்தமிழ் விடுதலைக்குழுக்களுக்கும் இந்திரா காந்தியும் எம்.ஜி.ராமச்சந்திரனும் ராணுவ உதவியும் நிதி உதவியும் செய்தனர். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல இடங்களில் அரசின் ஆதரவோடு ஆயுதப்பயிற்சியும் கொடுக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது விமானத்தில் ஈழப்பகுதிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் அனுப்பினார். பிரபாகரின் புகைப்படம் பலர் வீடுகளில் பெருமையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சூழலில் தான் ராஜீவின் கொலை நடந்தது.

பெருவாரியாக ஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டில் மூலை முடுக்கிலெல்லாம் வெளிப்படையான ஆதரவாளர்கள் இருந்தனர்.

அதனால் பலர் SITயின் சந்தேகத்திற்கும் சித்ரவதைக்கும் ஆளானர்கள்.

தமிழ் நாட்டில் இருக்கிற புலிகள் ஆதரவாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் பிடித்துச் சித்ரவதை செய்யப்பட்டனர்.

சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தமிழர்கள் வீடுகளில் நள்ளிரவிலும் அதிகாலையிலும் காவலர்கள் புகுந்து ஆண்களை பெண்களைக் கைது செய்தனர்.

வழக்கறிஞர்கள், மனித உரிமை, கட்சி செல்வாக்கு எதுவும் அங்கு செல்லுபடியாகவில்லை. மாட்டியவர்க்கு எல்லாம் அடி, உதை, அவமரியாதை, அவமானம் மற்றும் வேதனை.


முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை என்று எல்லோரும் வாயை மூடிக்கொண்டு நடக்கிற அநீதியை கண்டு கொள்ளாது இருந்து விட்டனர். இன்னும் கூட பலர் அதைப் பற்றி வெளியில் பேசுவதில்லை.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செய்யப்பட்ட எச்செயலையும் ராஜீவ் கொலையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும் குறுகிய பார்வை சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு இருந்ததாக உச்ச நீதிமன்றமே தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.

3) தடா சட்டம்:

ராஜீவ் காந்தியின் கொலை ஒரு பயங்கரவாதச் செயல் என்ற புள்ளியில் இருந்தே SITயின் நடவடிக்கைகள் இருந்தன. எனவே தடா என்கிற ஆள் தூக்கி கொடுங்கோல் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

வழக்கமான நடைமுறையில் இருக்கிற இந்தியச் தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒருவரை 15 நாட்கள் தான் காவல் விசாரணையில் வைக்க முடியும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்லது தடா 1987ன் கீழ் ஒருவரை இரண்டு மாத காலத்திற்கு காவலில் வைத்து விசாரிக்கலாம்.

SP அளவிற்கு அந்தஸ்து உடைய உயர் காவல் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றாலே போதுமானது. அதுவே சாட்சியமாகப் பயன்படுத்தப்படும். நீதிபதி முன்பு குற்றம் சாட்டப்பட்டவரிடம் வாக்குமூலம் பெறவேண்டியதில்லை.

மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவர் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். பிறகு அவர் உச்ச நீதிமன்றத்திலும் முறையீடு செய்யலாம். ஆனால் தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தடா நீதிமன்றத்தை விட்டால் உச்சநீதிமன்றம் தான் கதி.

தடா சட்டத்தின் கீழ் நடந்த புலனாய்வும், தடா நீதிமன்றத்தில் நடந்த விசாரணையும் ரகசியமாக வைக்கப்பட்டன.

வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும் அரசு தரப்பில் கொடுக்கப்படும் தகவல்களையே சார்ந்து இருந்தனர்.

யாரைக் கைது செய்கிறார்கள், எத்தனை நாள் எங்கு வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

மல்லிகை என்கிற மர்ம பங்களாவின் சுவர்களுக்குத்தான் தெரியும் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் சிந்திய ரத்தமும், கொட்டிய கண்ணீரும், பட்ட அவமானங்களும்.

குடும்பம் குடும்பமாக கொடுமைப் படுத்தப்பட்டார்கள். விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டவர்களின் மனநிலையைக் குலைக்க அவர்களின் வீடுகளுக்குள் இரவு நேரங்களில் திடீர் திடீர் என்று புகுந்து குடும்பத்தினரை தொந்தரவு செய்தனர். அலைக்கழித்தனர்.

சிறப்பு புலனாய்வுக்குழுவின் சித்ரவதையினால் சிதைந்த குடும்பங்கள் ஏராளம். மல்லிகைக்குச் சென்றவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மனநிலை பாதிக்கப்பட்டனர். நிரந்தரமாக உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தங்களது வசதிக்கு ஏற்றார்போல செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் தங்களுக்குச் சாதகமான மனப்பான்மையை உருவாக்கினர்.

ஜனநாயகம் எனும் நாம் போராடிப் பெற்றெடுத்த அரிய கொடை ராஜீவ் படுகொலை என்கிற ஊதிப் பெருக்கப்பட்ட மாயையால் அடித்துச்செல்லப்பட்டது.


4) 26 பேருக்கு தூக்கு

இத்தகைய கொடுமையான தடா சட்டத்தைப் பயன்படுத்தித் தான் 1992ம் ஆண்டு மே மாதம் சென்னையை அடுத்த பூந்தமல்லி தடா சிறப்பு நீதி மன்றத்தில் 26 நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

1993 மே மாதத்தில் தடா நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. ஆயிரத்திற்கு மேற்பட்ட சாட்சிகள் குறிக்கப்பட்டு 288 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் கைப்பற்றப்பட்ட புகைப்படங்கள், கடிதங்கள், வீடியோ கேசட்டுகள், வயர்லெஸ் தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடித்துச் சித்ரவதை செய்து வாங்கிய வாக்குமூலங்களைப் பயன்படுத்தியும் சிறப்புப் புலனாய்வுக்குழு தனது வாதத்தை நிகழ்த்தியது.

1998 ஜனவரி மாதம் 28ம் நாள் தடா சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நவநீதன் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வரலாறு காணாத இந்தத் தீர்ப்பு எல்லோரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

ராஜீவ் கொலையில் முதன்மை குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது தமிழ்நாட்டில் இல்லை அல்லது இறந்து விட்டார்கள். ராஜீவ் கொலைக்கு உதவி செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்க்கு தூக்கு தண்டனை என்பது கடும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

5) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

செப்டம்பர் 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் K.T.தாமஸ், D.P.வாத்வா, S.S.M. கெளத்ரி கொண்ட மூன்று நீதிபதிகள் பெஞ்ச் முன்பு ராஜீவ் கொலை வழக்கு மேல் முறையீட்டு விசாரணைக்கு வருகிறது.

11, மே 1999ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தடா நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதிப் படுத்தியது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. மற்ற 19 நபர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்தது.

6) கவர்னரிடம் கருணை மனு

2000ம் ஆண்டு நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களைப் பரிசீலித்த தமிழக கவர்னர் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். மற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரித்தார்.

அதன் பிறகு 2000ம் ஆண்டிலேயே சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் இந்திய ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். 2011ம் ஆண்டு பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இம்மூவரது கருணை மனுக்களை நிராகரித்தார். தூக்கு தண்டனை மக்கள் போராட்டத்தால் நிலுவையில் நிற்கிறது.

7) ஜெயின் கமிசன் மற்றும் MDMA

ராஜீவ் கொலைக்கு பின்னால் இருக்கிற சதி பற்றி விசாரித்த ஜெயின் கமிசன் சிறப்பு புலனாய்வுக் குழுவின் புலனாய்வில் முக்கிய கூறுகள் நிறைய விடுபட்டிருக்கின்றன என்றும் அரைகுறையாக புலனாய்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறது.

சந்திரசாமிக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறும் ஜெயின் கமிசன் சந்திரசாமிக்கும் அந்நாள் பிரதமர் நரசிம்ம ராவிற்கும் சந்தேகத்திற்கிடமான நெருக்கம் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது.

மேலும் சந்திரசாமி பற்றிய தகவல்களைத் தருவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கு நரசிம்மராவ் தடை போட்டார் என்றும் ஜெயின் கமிசன் கூறுகிறது.

வர்மா கமிசன் மற்றும் ஜெயின் கமிசன் ஆகிய கமிசன்களின் அறிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ் அரசு இப்போது MULTI DISCIPILINARY MONITARING AGENCY (MDMA) என்கிற
புதிய விசாரணை அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கும் CBIயின் அதிகாரிகளின் ஒருவரான சூரி என்பவரைத் தலைவராக நியமித்துள்ளது மத்திய அரசு.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட உடன் சந்திரசாமியும் அவரது கூட்டாளிகளும் தாய்லாந்திற்குப் போனது ஏன் என்கிற கேள்வியில் இருந்து MDMA தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

MDMA தற்போது ராஜீவ் கொலைக்கான சதி எப்போது எங்கு தீட்டப்பட்டது, ஆயுதங்கள், வெடிமருந்து எப்படி யாரால் கொண்டு வரப்பட்டது என்று விசாரித்துக்கொண்டிருக்கிறது.

ராஜீவ் கொலைக்கு யார் யார் காரணம், சர்வதேச சதி இருக்கிறதா, என்கிற உண்மைகள் உறுதியாகாத நிலையில் மூவருக்குத் தூக்கு தண்டனை என்பது நீதியற்றது.

MDMAவின் கண்டுபிடிப்பில் வேறோரு குற்றவாளி வேறோரு காரணத்திற்காக ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததாக வெளிவந்தால் தூக்கு தண்டனையில் கொல்லப்பட்டவர்கள் திரும்ப வருவார்களா?

இதற்கிடையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அதற்காக அடியும் உதையும் வாங்கிய, தற்கொலை செய்து கொண்ட, சிறையில் பல ஆண்டுகளைக் கழித்த, தூக்கு தண்டனைக்குக் காத்திருக்கிற பலரின் துயரத்திற்கு என்ன பதில்?

8) உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இந்திய அமைதிப்படையின் அத்துமீறலும்

ராஜீவ் கொலை வழக்கிலான மேல்முறையிட்டு மனுமீது உச்சநீதி மன்றம் தமது தீர்ப்பில் பழிவாங்கும் நோக்கமே ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்கிறது.

கொலையாளிகள் ராஜீவ் காந்தி என்கிற தனிமனிதரைக் கொல்லவே திட்டமிட்டனர்; இந்தியா மீது அவர்கள் போர் தொடுக்கவோ அல்லது இந்திய இறையாண்மையின் மீது தாக்குதல் நடத்தவோ திட்டமிடவில்லை என்கிறது உச்ச நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு அனுப்பிய இந்திய அமைதிப்படை நடத்திய வன்முறை, பாலியல் பலாத்காரம் இவற்றினால் பாதிக்கப்பட்டவர்களே ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர் என்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்திய அமைதிப்படை இலங்கைக்குப் போனதும் தமிழர்களைக் கொன்று குவித்ததும் அவமானப்பட்டு தோற்றுப்போய்த் திரும்பி வந்ததும் நமது பொது புத்தியில் இருந்து மறைந்து போன இந்தக் காலகட்டத்தில் ராஜீவ் கொலை வழக்கும் மூன்று தமிழர் உயிர் காக்கும் போராட்டமும் அத்துயரத்தை நினைவூட்டுகின்றன.


9) இலங்கையில் இந்திய அமைதிப்படை

1987ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரில் யாழ்ப்பாணம் நகரத்தைக் தாக்கியது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணம் பகுதி முடக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது.

பாகிஸ்தான், இலங்கை ராணுவத்திற்கு உதவுகிறது என்கிற செய்தியும் உறுதியானது. இந்தியா தலையிட வேண்டும் என்கிற நிர்பந்தம் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்டது.

அப்போது இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் எழுந்த ஆதரவு, அதன் பொருட்டு நடந்த போராட்டங்கள் ஆகியவற்றின் அழுத்தமும் நிர்பந்தத்தை அதிகரித்தது.

முதலில் இந்தியக் கப்பற்படை இலங்கைக்கு தமது ஆயுதங்களற்ற கப்பல்களை யாழ்ப்பாணத்தில் சிக்கியிருந்த தமிழ் மக்களுக்கு தேவையான உணவு, உடை, மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் அனுப்பியது. ஆனால் இலங்கைக் கப்பற்படை இந்தியக் கப்பல்களை வழியிலேயே மறித்து திருப்பி அனுப்பிவிட்டது.

இதனைத் தொடர்ந்து ஜூன் 4, 1987ம் ஆண்டு இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி ஆபரேசன் பூமாலை என்று பெயரில் தமிழர் பகுதியில் மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை வானத்திலிருந்து பொட்டலங்களாகப் போட்டது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு உதவுவது மட்டுமல்லாது இலங்கை அரசியலில் நேரடியாக இந்தியா தலையிட்டது.

இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்தியாவுடன் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வந்தார். ஜூலை 27, 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்பேச்சு வார்த்தையில் விடுதலைப் புலிகளை இரு நாட்டு அரசுகளும் இணைக்கவில்லை. அந்த ஒப்பந்தத்தின் படி இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது என்றும் யாழ்ப்பாணப்பகுதியில் இருந்து தனது ராணுவத்தை விலக்கிக் கொள்வது என்றும் தமிழ்ப் போராளிக் குழுக்கள், தமது ஆயுதங்களை ஒப்படைப்பது என்றும் முடிவானது. தேவையின் பொருட்டு இந்திய ராணுவத்தை இலங்கை அரசு அமைதியை நிலை நாட்ட தமது நாட்டுக்கு அழைக்கலாம் என்றும் ஒப்பந்தமானது.

தெற்கு இலங்கையில் போராடி வரும் JVP எனும் இடதுசாரி ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதற்கு தமது ராணுவத்தை அனுப்ப வேண்டிய சிக்கலில் இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்திய அமைதிப் படையை இலங்கையில் தமிழர் வாழும் வடக்குப் பகுதிக்கு அழைத்தார்.

ஜுலை 30, 1987 தொடங்கி ஆயிரக்கணக்கான முப்படை ராணுவ வீரர்களை இந்தியா இலங்கையில் தமிழர் வாழும் பகுதிக்கு அனுப்பியது. 1987க்கும் 1989க்கும் இடையிலான காலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் குவிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்த ஒப்பந்தப்படி பிற ஆயுதக்குழுக்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க முன் வந்தாலும் விடுதலைப் புலிகள் அமைப்பு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் புலிகள் அமைப்பு இந்திய அமைதிப்படையின் வரவை அதன் இருப்பை எதிர்த்தது. வெகு விரைவில் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் மோதல்கள் தொடங்கின.

இந்தியா எதற்காகத் தமது படையை இலங்கைக்கு அனுப்பியது என்பது பற்றி ராணுவ அதிகாரிகள் மத்தியில் இருந்த தெளிவின்மை, உளவுத்துறையான RAWவுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையே வர மறுத்த ஒத்துழைப்பு, விடுதலைப் புலிகளின் போர் தந்திரங்கள், உள்ளூர் மக்களுக்கு இருந்த விடுதலைப் புலிகள் ஆதரவு, இந்திய அமைதிப்படைக்கு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி பற்றிய புவியியல் அறியாமை ஆகிய காரணங்களினால் இந்திய அமைதிப்படையினர் விடுதலைப்புலிகள் உடனான மோதல்களில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தனர்.



இந்திய அமைதிப்படையினர் புலிகளுடனான மோதல்களில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் உடனடியாக தமிழர் வாழும் பகுதியில் தேடுதல் வேட்டையை இந்திய அமைதிப்படை தொடங்கியது.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்ததும் ஊடகங்கள் விரட்டி அடிக்கப்பட்டதும் இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு ஏதுவாய் அமைந்தன. வீடுகளில் புகுந்து ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் தாக்கினர். விசாரணை என்ற பெயரில் பிடித்துக் கொண்டு போனார்கள்.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயினர். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். மேலும் இந்திய அமைதிப்படையினர் தமிழர்களின் லட்சக்கணக்கான ரூபாய் பெருமான பொருட்களையும் சொத்துக்களையும் கொள்ளையடித்தனர்.

1987, அக்டோபர் 21ம் நாள், இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் புகுந்து மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உட்பட 70க்கும் மேற்பட்டவர்களைக் கண்மூடித் தனமாகச் சுட்டுக்கொன்றனர்.

1989, ஆகஸ்ட் 2ம் நாள், வல்வெட்டித்துறையில் 63 அப்பாவித் தமிழர்களை இந்திய அமைதிப்படையினர் வீடுகளில், தெருக்களில், கடைகளில் சுட்டுக்கொன்றனர்.

வல்வெட்டித்துறை படுகொலை என்பது அமெரிக்கா, வியட்நாம் நாட்டில் மை லாய் கிராமத்தில் நடத்திய படுகொலைக்கு ஒப்பானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

வல்வெட்டித்துறையைப் போன்று ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 21ம் தேதிகளிலும் இந்திய அமைதிப்படை அப்பாவித் தமிழர்கள் மீது தமிழர் பகுதியில் தாக்குதல நடத்தி படுகொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் கொள்ளை நடத்தியிருக்கிறது.

இந்தக்குற்றங்களுக்கு யாரும் தண்டிக்கப்படவில்லை. 1989 மற்றும் 1990களில் இந்திய அமைதிப்படை வேகவேகமாக திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டதே ஒழிய விசாரணைகளோ, போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடைபெறவில்லை.

இலங்கையில் இந்திய அமைதிப்படை நடத்திய அத்துமீறல்களுக்கு இந்திய அரசும், சிவில் சமூகமும் நடவடிக்கை எடுத்திருந்தால் உச்ச நீதிமன்றம் சொல்வதைப் போன்ற பழிவாங்கல் நிகழ்ச்சி நடந்திருக்காது. ராஜீவ் காந்தியின் கொலை தடுக்கப்பட்டிருக்கலாம். இலங்கையில் 2009ல் நடந்த இனப்படுகொலையைத் தடுத்திருக்கலாம்.

10) இறுதியாக…

ராஜீவ் கொலையை யார் செய்தார்கள், யார் திட்டமிட்டார்கள் என்பதை இந்திய அரசு அமைத்த MDMA என்கிற MULTI DISCIPILANRY MONITARING AGENCY இன்னும் விசாரணை செய்து கொண்டிருக்கும் வேளையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை என்பது நியாமல்ல.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் ராஜீவ் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் இல்லை. கொலை நடந்த இடத்தில் அவர்கள் இல்லை. கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் யாரோ. கொலை செய்தவர்கள் யாரோ. கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை என்பது நியாயமல்ல.

ராஜீவ் கொலை வழக்கு தடா நீதிமன்றத்தில் தடா சட்டத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட நிலையில் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த வழக்கே ஏற்புடையதல்ல. மனித உரிமைகளை மறுத்து நடத்தப்பட்ட புலனாய்வு, விசாரணை அதன் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பு, இவற்றின் அடிப்படையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்குவது நியாயமல்ல.

ஏற்கனவே 21 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துவிட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்வதே நியாயமானது.

இறுதியாக அரசே ஒரு கொலை செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

நாளைக்கு இதே போன்ற ஒரு புலனாய்வுக்குழுவைக் கொண்டு,
இதே போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு
இதே போன்ற விசாரணை நடத்தி தூக்குக் கயிற்றை அரசு நம்மில் பலர் மீது வீசக்கூடும்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் - நேர்காணல் : பி.பீட்டர் துரைராஜ்

"பார்வையாளர்களிடம் அறிவை, பொறுமையை, கவனத்தை, உழைப்பைக் கோருகிற வடிவம் இது" ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன் - நேர்காணல் : பி.பீட்டர...